அதிமுக சட்ட விதிகளின்படி, கடந்த ஜூலை 11 ம் தேதி நடைபெற்ற சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பினை ஒன்றரைக் கோடி கழகத் தொண்டர்கள் சார்பாக வரவேற்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மேலும், இன்றைய தினம் தர்மம் நீதி வென்றுள்ளது என்றும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நம்மையெல்லாம் ஆளாக்கிய கழக நிறுவனத் தலைவர் எம்ஜிஆர், நம்மை வாழவைத்த இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் வழியில் அதிமுக தொண்டர்களையும், திமுக அரசின் அராஜகத்தில் இருந்து தமிழக மக்களையும் காக்கும் அறப்போரில் முழுமனதோடு ஈடுபட்டு வருகிறோம்.
தூய்மையான மனதுடன் நீதி, நேர்மை, நாணயத்தை நம்பி, கழகத் தொண்டர்களின் முழு ஆதரவுடன் போராடி வருகிறோம். இன்றைய தினம் தர்மம் நீதி வென்றுள்ளது.
அண்மை செய்தி: ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தால் அதை எதிர்கொள்வோம்-நத்தம் விஸ்வநாதன்
ஜூன் 23, ஜூலை 11 ஆகிய தினங்களில் நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டம் செல்லும் என்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், அறிவிப்புகளும், முடிவுகளும் செல்லும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் இன்று வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை மிகுந்த மன மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.
இந்த சட்டப் போராட்டத்தில் என்னோடு துணை நின்ற தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், கழக நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த அரிக்கையில் இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.








