புதுக்கோட்டை தேர் விபத்து; அண்ணாமலை கண்டனம்

சமீபகாலமாக தொடர்ந்து நடைபெறும் தேர்விபத்திற்கு அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கே காரணம் என புதுக்கோட்டை தேர் விபத்து குறித்து பாஜக மாநில தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோகரணம் ஸ்ரீ பிரகதாம்பாள்…

சமீபகாலமாக தொடர்ந்து நடைபெறும் தேர்விபத்திற்கு அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கே காரணம் என புதுக்கோட்டை தேர் விபத்து குறித்து பாஜக மாநில தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோகரணம் ஸ்ரீ பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்னேஸ்வரர் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரோட்டத்தின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை ஒரே நேரத்தில் வெகு வேகமாக இழுத்ததால் தேர் நிலை குலைந்து தேரின் பின் சக்கரத்தில் கிளாம்பு கழன்று முன்னோக்கி சாய்ந்தது. தேர் சாய்ந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் உட்பட 8 பேர் காயமடைந்தனர்.

இந்த தேர் விபத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், இன்று காலை புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற அரைக்காசு அம்மன் பிரஹதாம்பாள் கோவில் தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது என்ற செய்தி கவலை அளிக்கிறது. தமிழகத்தில் சமீபத்தில் தஞ்சை, தர்மபுரி, உளுந்தூர்பேட்டை எனத் தொடர்ச்சியாகத் தேர் விபத்துகள் நடைபெற்று வருகிறது.

இன்று புதுக்கோட்டையில் நடந்த தேர் விபத்தில் 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். பாஜக சார்பாக மாவட்ட தலைவர் செல்வன் அழகப்பன் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கும், இந்து சமய அறநிலையதுறையின் திறனற்ற செயற்பட்டாலும் இது போன்ற தேர் விபத்துகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. காயமடைந்த மக்களுக்கு நிவாரணமாக 5 லட்சம் ரூபாய் உடனடியாக திமுக அரசு வழங்க வேண்டும் என்பது பாஜகவின் கோரிக்கை என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.