மாணவிக்கு வன்கொடுமை; கொத்தனாருக்கு சிறை தண்டனை

பள்ளி மாணவியை வன்கொடுமை செய்த வழக்கில் கொத்தனாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு பகுதியை சேர்ந்த கொத்தனார்…

பள்ளி மாணவியை வன்கொடுமை செய்த வழக்கில் கொத்தனாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு பகுதியை சேர்ந்த கொத்தனார் சத்தியராஜ் என்பவர் அதே பகுதியை சேர்ந்த காண்ட்ராக்டரிடம் வேலை பார்த்து வந்துள்ளார். காண்ட்ராக்டரின் 15 வயது மகளான 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் சத்தியராஜிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறி 2020ம் ஆண்டு உறையூரில் உள்ள அவரது நண்பர் வீட்டுக்கு கடத்தி சென்று அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுபற்றி நெல்லிக்குப்பம் போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்ததன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியராஜை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நீதிபதி எழிலரசி தீர்ப்பளித்தார்.

அதில் சத்தியராஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு சமூக நலத்துறையின் கீழ் உள்ள நிதியில் ரூ.1 லட்சம் இழப்பீடாக குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.