பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் கலையரசன், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் நட்சத்திரம் நகர்கிறது. டென்மா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு செல்வாவும், கலை இயக்குனராக ஜெயரகுவும் பணியாற்றியுள்ளார். திரையரங்கில் வெளியாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் இதுவரை காதல் என்று சொன்ன அனைத்தும் உடைத்து ஒரு புது பிம்பத்தை உருவாக்க உள்ளது.
சினிமாவின் மீது மோகம் கொண்ட அர்ஜுன் (கலையரசன்) புதுச்சேரியில் உள்ள ஒரு நாடக குழுவில் இணைகிறார். மேடை நாடகங்கள் மூலம் தங்கள் கருத்துக்களை மக்களுக்கு வெளிப்படுத்தி வரும் அந்த குழு, காதல் என்ற தலைப்பில் ஒரு நாடகத்தை நடத்த முடிவு செய்வார்கள். காதல் மட்டும் அல்ல அதற்கு பின்னால் இருக்கும் சாதி அரசியலையும், போலி பிம்பங்களையும் நாடகமாக மக்களிடம் வெளிப்படுத்த முயற்சி செய்வார்கள். அந்த நாடக குழுவில் இருக்கும் ரெனே (துஷாரா) மற்றும் இனியன் (காளிதாஸ்) இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் காரணமாக காதல் முறிவு ஏற்படும். இவர்களின் காதல் ஒன்று சேர்ந்ததா காதலுக்கு பின்னால் இருக்கும் சாதி அரசியலை நாடகமாக மக்களிடம் கொண்டு சேர்த்தார்களா என்பதே இந்த படத்தின் கதை.
காதலை மையமாக கொண்டு பல ஆயிரம் திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும் வெறும் ஆண் பெண் காதலை மட்டும் இந்த படம் பிரதிபலிக்கவில்லை. மாறாக பாலின பேதங்கள், சாதி, மதங்கள், நிற வேறுபாடுகள், மொழி இவற்றை எல்லாம் கடந்து தன்பால் ஈர்ப்பாளர்களின் காதலையும், திருநங்கையின் காதலையும் எந்த வித தயக்கமும், அதே நேரத்தில் சமரசமும் இல்லாமல் இயக்குனர் பா.ரஞ்சித் பேசியுள்ளார்.
மனிதனுக்கு இயற்கையாக தோன்றும் காதல் உணர்வை ஒரு போலியான பிம்பத்தை உருவாக்கி நாடக காதலாக மாற்றப்படுகிறது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது இந்த படம். மிகவும் அழுத்தமாக சொல்ல வேண்டிய பல காட்சிகள் நகைச்சுவை உணர்வோடு சொல்லி இருந்தாலும் அவை நம்மை சிந்திக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கிராமத்து பின்னணியும், பிற்போக்குத்தனமான சிந்தனையும் கொண்ட அர்ஜுன் என்ற கதாப்பாத்திரத்தில் கலையரசன் நடித்துள்ளார். அவர் தனது நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இயல்பான நடிப்பை வெளிப்படுத்த முயற்சி செய்துள்ளார் கலையரசன்.
பா.ரஞ்சித் படங்களில் வரும் பெண் கதாப்பாத்திரங்கள் எப்போதும் தைரியசாலியாகவும், எதையும் துணிந்து, தனித்து செய்யும் வல்லமை படைத்தவர்களாகவே இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு துணிச்சல் மிக்க பெண்ணாக ரெனே என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் துஷாரா விஜயன். இதற்கு முன்பு சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவராலும் பாராட்டப்பட்ட துஷாரா அதைவிட கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரத்தை இந்த படத்தில் ஏற்று தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். குறிப்பாக இந்த படத்தின் ஒரு நட்சத்திரமாகவே அவர் மின்னுகிறார்.
இனியன் என்னும் கதாப்பாத்திரத்தில் காளிதாஸ் ஜெயராமன் நடித்துள்ளார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை நேர்த்தியாக காளிதாஸ் கையாண்டு தன்னுடைய பெஸ்ட்டை பதிவு செய்துள்ளார்.
படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை இளையராஜா பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அதே போல புத்தர் சிலை, மாட்டுக்கறி, சாதி அரசியல், காட்டுப்பூனை, நாட்டுப்பூனை என பா ரஞ்சித்தின் அரசியலும் அதற்கான வசனங்களும் கவனத்தை பெறுகிறது. குறிப்பாக ஆணவ கொலைகள் செய்யப்பட்ட கோகுல்ராஜ், இளவரசன் உள்ளிட்ட பலரது மரணங்களுக்கு பின்னால் உள்ள சாதி அரசியலும் இதில் விவாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எதிர் கருத்து உள்ளவர்களுக்காகவும் குரல் கொடுக்கிறது இந்த திரைப்படம் என ஒரு புதிய விவாதத்தையும் உருவாக்க முயற்சி செய்துள்ளார் பா.ரஞ்சித்.
முதல் பாதி காதல் பற்றிய புரிதலை உருவாக்க முயற்சி செய்திருந்தாலும் அது சரியான விதத்தில் அமையவில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இரண்டாம் பாதி இயக்குனரின் அரசியல் தெளிவை வெளிப்படுத்தி உள்ளது. சில காட்சிகள் ஆவணப்படம் போன்ற உணர்வை கொடுப்பதால் நம்மையும் அறியாமல் சலிப்பு தட்டுகிறது.
காதல் என்னும் அன்பை சாதி, மதம், பாலினம், கலாச்சாரம், மொழி இவற்றை எல்லாம் காரணம் காட்டி பிரிக்க வேண்டாம் என்பதே இந்த படத்தின் மூலமாக இயக்குனர் சொல்ல வருவது. மொத்தத்தில் பா ரஞ்சித் உருவாக்கிய இந்த காதல் நட்சத்திரம் மின்னிக் கொண்டே நகர்கிறது.









