தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாடு அரசின் ஜிஎஸ்டி வருவாயைக் காக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் இன்று (07.10.2023) நடைபெற்ற 52 வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) மன்றக் கூட்டத்தில் தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார்.
அப்போது, அமைச்சர் தங்கம் தென்னரசு, இறுதிப் பயன்பாட்டின் அடிப்படையில் வேறுபடுத்துவதன் மூலம் எக்ஸ்ட்ரா நியூட்ரல் ஆல்கஹால் (ENA) மீது GST மற்றும் மதிப்புக் கூட்டு வரி (VAT) கீழ் இரண்டு விதமான வரி விதிப்பதை எதிர்த்து தனது வலுவான வாதங்களை எடுத்துரைத்தார்.
ENA மீது இரண்டு விதமான வரி விதிப்பதில் உள்ள நிருவாக நடைமுறை சிக்கல்களை எழுப்பினார். தமிழ்நாடு நிகர ENA இறக்குமதியாளராக இருப்பதால், அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் என்று அவர் கவலை தெரிவித்தார்.
மேலும், மொலாஸஸ் (Molasses) மீதான ஜிஎஸ்டி வரிவிகிதத்தை கணிசமான அளவு குறைத்தால், மாநிலத்திற்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.
வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் சிறு தானிய (Millets) பொருட்களின் நுகர்வை ஊக்குவிக்கும் வகையில் அவற்றின் மீதான வரியை குறைக்கும் மன்ற முன்மொழிவு ஏற்றுக் கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட ஒப்பந்த பணி சேவைகளில், தலைகீழ் வரி அமைப்பு( Inverted rate structure) காரணமாக சேரும் உள்ளீட்டு வரி வரவை, இனி வருங்காலங்களில் திரும்பப் பெறுவதற்கான மன்ற முன்மொழிவு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் முதன்மை செயலாளர்/ வணிக வரி ஆணையர் தீரஜ் குமார் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.







