முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆளுநர் உரை – அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

சட்டமன்றத்தில் உரையை திருத்தி வாசித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்

2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் ஒளவையாரின் பாடலோடு தனது உரையை தொடர்ந்தார். அப்போது, தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை எனவும், உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்துப் படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது எனவும், சட்டப்பேரவையில் ஆளுநர் முன்பே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். முதலமைச்சர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆளுநர் ஆர்.என்.ரவி பாதியில் புறப்பட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து ஆளுநரின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்ட உரையை, சட்டப்பேரவையில் படிக்கும் போது சில வார்த்தைகளையும், சில பத்திகளையும், ஆளுநர் தவிர்த்திருக்கிறார். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், சட்டப்பேரவையும் அவமதிக்கும் செயலாகும். தமிழ்நாடு அரசால் குறிப்பிடப்படும் சில சொற்களில் பாமகவுக்கு உடன்பாடு இல்லை; ஆளுனருக்கும் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசால் தயாரித்து வழங்கப்படும் உரையை மாற்றாமல் படிப்பது தான் நாகரிகமும், மரபும் ஆகும்.

அச்சிடப்பட்ட ஆளுநர் உரையை மட்டுமே அவைக்குறிப்பில் ஏற்ற வேண்டும் என்று கோரி முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்தபோது, அவை நடவடிக்கைகள் முடிவடைந்து தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே ஆளுநர் வெளியேறியது ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்காது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அரசும் ஆளுனரும் நிர்வாகம் என்ற நாணயத்தின் இரு பக்கங்கள். அரசுக்கும், ஆளுனருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்வது நல்லதல்ல. தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆளுநரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும்“ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ”ஆளுநரின் நடவடிக்கைகள், அவரின் ஆர்எஸ்எஸ் முகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது. தேசிய கீதம் இசைப்பதற்குள் ஆளுநர் பேரவையிலிருந்து வெளியேறியது அவை மீறல் மட்டுமின்றி, தேசியகீத அவமதிப்புமாகும். அவர் இனியும் அப்பதவியில் நீடிக்கத் தகுதியில்லை. எனவே அவர் பதவி விலக வலியுறுத்தி ஜனவரி 13ஆம் தேதி விசிக சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். ஆளுநரின் போக்குகள் ஏற்கனவே திட்டமிட்ட ஒன்றுதான். இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையில் முரண்பாடுகளை உருவாக்கி அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் திருமாவளவன் பதிவிட்டுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “ஆளுநர் உரையின்போது தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிகழ்ந்திருக்கும் சம்பவங்கள் துரதிஷ்டவசமானவை. தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் ஒரு கரும்புள்ளியாகிவிட்டது. ஆளுநர் உரையைத் தயாரித்து அச்சுக்கு அனுப்புவதற்கு முன்பே இந்தக் கருத்து வேறுபாடுகளை ஆளுநர் மாளிகையும், அரசும் சரிசெய்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் விட்டதால்தான் சட்டப்பேரவையில் விரும்பத்தகாத நிகழ்வுகள் அரங்கேறியிருக்கின்றன.

அறிஞர் அண்ணா சொன்னதைப் போல, ஆளுநர் பதவி தேவையில்லை என்பதுதான் எங்களுடைய நிலைபாடு. அதே நேரத்தில், அரசியல் சட்டப்படி, அந்தப் பதவி இருக்கும் வரை அதிலிருப்பவருக்கு அரசு உரிய மரியாதை கொடுக்க வேண்டியது அவசியம். இதைப்போன்றே, மரபுகளை உடைத்துவிட்டு, சட்டப்பேரவையை அவமதிக்கும் வகையில் ஆளுநர் நடந்துகொண்டதும் சரியானதல்ல. ஆளுநருக்கும், தி.மு.க அரசுக்கும் இடையே தொடரும் இத்தகைய மோதல்போக்கு ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதோடு மக்களுக்கும், மாநிலத்துக்கும்தான் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram