துணிவு முழுக்க முழுக்க அஜித்தின் ஆட்டம் தான் -ஹெச் வினோத் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி

துணிவு படம் முழுக்க முழுக்க அஜித்தின் ஆட்டம் தான். இப்படத்தில் அஜித்  கடின உழைப்பை  தந்துள்ளார். வசனங்கள், சண்டை காட்சிகள் போன்றவற்றில்  நிறைய மெனக்கெட்டு உள்ளார் என நியூஸ் 7 தமிழுக்கு துணிவு  பட…

துணிவு படம் முழுக்க முழுக்க அஜித்தின் ஆட்டம் தான். இப்படத்தில் அஜித்  கடின உழைப்பை  தந்துள்ளார். வசனங்கள், சண்டை காட்சிகள் போன்றவற்றில்  நிறைய மெனக்கெட்டு உள்ளார் என நியூஸ் 7 தமிழுக்கு துணிவு  பட இயக்குனர்
ஹெச் வினோத்பேட்டி  பிரத்யேக  பேட்டி அளித்துள்ளார். 

துணிவு திரைப்படம் பொங்களுக்கு வெளியாக உள்ள நிலையில் அதன் இயக்குனர் ஹெச் வினோத் நியூஸ் 7 தமிழுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது..

” வலிமை  படப்பிடிப்பின் போது தான் துணிவு படத்தின் பணிகள் ஆரம்பித்தன. எந்த பதட்டமும் இல்லாமல் தான் இந்த படத்தின் பணிகள் நடந்தது. ரசிகர்களுக்கு நிறைய ஆசைகள் இருக்கிறது. அதை சரியாக செய்து முடிக்க  வேண்டும் என்ற கடமையும்  உள்ளது. அதற்காக நாம் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. எல்லா தொழிலை போலவும் இதிலும் கடினம் உள்ளது. சில நேரத்தில் குடும்பத்தை பார்க்கமால்,  தூங்காமல் வேலை செய்ய வேண்டியுள்ளது.

சின்ன சின்ன விஷயங்களை கூட வெளியில் சொல்ல கூடாது என்று முடிவெடுத்து உள்ளோம். அது படத்தை பற்றி கசியவிடுவது போல ஆகிவிடும். படத்தில் அஜித் ஜாலியாக நடித்துள்ளார்.

எதிர்மறையான விமர்சனங்களை இன்றைய காலத்தில்  தவிர்க்க முடியாதது. அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றித்தான் யோசிக்க வேண்டும். யார் அதை செய்கிறார்கள் என்று தேடிக் கண்டுபிடிக்க  முடியாது. படத்தை பார்த்த பின் அவர்கள் விமர்சனம் செய்த மாதிரி  படம் இல்லை என  புரிந்து கொள்வார்கள். அதற்காக பதட்டப்பட வேண்டியது அவசியம் இல்லை. தீரன் அதிகாரம் ஒன்று போலவே படம் இயக்கினால்  4 படங்களுக்கு மேல் பண்ண முடியாது.

துணிவு படம் முழுக்க முழுக்க அஜித்தின் ஆட்டம் தான். இப்படத்தில் அஜித்  கடின உழைப்பை  தந்துள்ளார். வசனங்கள், சண்டை காட்சிகள் போன்றவற்றில்  நிறைய மெனக்கெட்டு உள்ளார்.  நடு கடலில் கடல் தண்ணீரை தன் மேல் ஊற்றிக்  கொண்டு நிறைய கஷ்டப்பட்டு உள்ளார்.

8 மணி நேரம் , 10 மணி நேரம் நடிகர்கள் நின்று கொண்டே இருக்க முடியாது அதனால் அவர்களை போல உள்ளவர்களை வைத்து டூப் போடுவார்கள். எல்லாரும் டாம் குரூஸ் மாதிரி கிடையாது. அவர் கற்று கொள்வதற்காகவே 10 கோடி செலவு செய்கிறார். நாம் அந்த தொகையில் படமே எடுத்து  எடுத்து விடுகிறோம்.  எனவே  அவை எல்லாம் சாத்தியம் இல்லை. கமர்ஷியல் படங்களில் டூப் பயன்படுத்துவது சாதாரணமான ஒன்றுதான்.

குடும்பத்தை பார்த்துக்கொள்ளும் விதம், ஒருவரை வரவேற்கும் விதம் என ஒட்டு மொத்தமாக அஜித் உங்களை ஈர்த்து விடுவார். அஜித் பற்றி தவறாக கேள்வி பட்டு நீங்கள் நேரில் சந்தித்தால் அது எல்லாமே தவறு என புரிந்து கொள்வீர்கள்.

வாரிசு, துணிவு ஒரே நாளில் வெளியாவதை போட்டியாக பார்க்க தேவையில்லை. பொங்கல் பண்டிகைக்கு நிறைய விடுமுறை நாட்கள் உள்ளது. இதற்கு பிறகு ஏப்ரல், மே தான் மீண்டும் விடுமுறை கிடைக்கும். அதனால் திரையரங்கு சென்று படம் பார்க்கும் அனைவரும் இரண்டு படமும் பார்ப்பார்கள் என நினைக்கிறேன். இதனால் திரையரங்குகளுக்கு நிறைய வருமானம் வரும்.

ரசிகர்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று அஜித் மட்டுமல்ல அனைத்து நடிகர்களும் நினைப்பார்கள். படம் நன்றாக இருந்தால் பாருங்கள், கொண்டாடுங்கள். படம் நன்றாக  இல்லை ஆனால் நடிகர்களுக்காக பார்க்கிறேன் என்றால் பாருங்கள் அவ்வளவு தான். படத்தை  வைத்து மற்றவர்களை வெறுக்க கூடாது.

வலிமை படத்திற்கு கிடைத்த கலவையான விமர்சனங்களுக்கு நிறைய காரணங்கள் உள்ளது. ஒவ்வொருவருக்கு  ஒரு கற்பனை, 3 லாக் டவுன் என பல்வேறு காரணங்கள் உள்ளது. சென்னையில் படப்பிடிப்பு நடத்துவது சவாலாக இருந்தது. நிறைய செட்  போட்டு  எடுக்க வேண்டிய நிலையிருந்தது. ஹெலிகாப்டர் காட்சி எடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தன. அதற்கு  சரியான சட்டம் கூட இல்லை.

தமிழ்நாட்டில் படப்பிடிப்பு நடத்த நிறைய பிரச்சனைகள் இருந்தது. படப்பிடிப்பிற்கு ஏற்ற இடங்கள் இங்கு இல்லை. படப்பிடிப்பு நடக்குமா நடக்காதா என்ற உத்தரவாதம் கூட  இங்கு இல்லை. பெரிய நடிகர்களை வைத்து சாலைகளில் படப்பிடிப்பு எடுக்க முடியாது. அனுமதி கிடைத்தாலும் யார் வேண்டுமானாலும் படப்பிடிப்பை நிறுத்த முடியும். பிரதமர் செல்கிறார் என்றால் படப்பிடிப்பு நிறுத்தி விடுவார்கள் இப்படி நிறைய பிரச்சனைகள் உள்ளது.

அஜித் இன்னும் துணிவு படத்தை முழுமையாக பார்க்கவில்லை. படம் முடியவே நிறைய நேரம் ஆகிவிட்டது. நாங்கள் பல முறை படத்தை பார்த்து விட்டோம். எடுக்கும் போது படம் நன்றாக இருந்தது. அதே போல மக்களுக்கும் அப்படியே போய்ச் சேர்ந்தால் நன்றாக இருக்கும்.

கமல்ஹாசனுடன் இணைந்து  படம் தயாரிப்பது குறித்து வெளியில் அறிவிக்க நேரம் வரவில்லை. சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் தான் அதை சொல்ல வேண்டும் சமூக வலைத்தளங்களில் பயணிக்க அதிக  நேரம் தேவை படுகிறது. அதனால்தான் அதில் செயல்படுவதில்லை.” என அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.