ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதற்காக குடியரசுத் தலைவரை சந்திக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு சட்டமன்றம் ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் கூடிய நிலையில், தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி முறையாக வாசிக்கவில்லை என்றும், சில வார்த்தைகளை தவிர்த்துவிட்டதாகவும் புகார் எழுந்தது. மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே அவையை விட்டு வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக திமுக மற்றும் திமுகவின் கூட்டணி கட்சிகள், தங்களது எதிர்ப்பையும், கண்டனத்தையும் முன்வைத்து வரும் நிலையில், ஆளுநரின் செயல்பாடு குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக சார்பாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் நேரம் அளித்தால், அவரை சந்திப்பதற்காக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்பி ஆ.ராசா ஆகியோர் புதுடெல்லி சென்றுள்ளனர்.
ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் குடியரசுத் தலைவருக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திமுக சார்பாக சட்ட ரீதியாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.








