முக்கியச் செய்திகள் ஆசிரியர் தேர்வு தமிழகம் செய்திகள் சட்டம்

“ஆளுநர் – நேற்று இன்று நாளை” – (நூல் அறிமுகம்)

இந்திய அரசியலில் நீண்ட காலமாக பேசுபொருளாக தொடர்ந்து இருப்பது ஊழலும், ஆளுநருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு இடையிலான மோதலும் தான். தமிழ்நாட்டிலும் ஆளுநர் வேண்டுமா என்பது 60 ஆண்டுகளுக்கு மேலாக விவாதப் பொருளாக இருந்து வருகிறது. அதனை ஆராயக் கூடிய வகையில் வழக்கறிஞர் சுந்தரராஜன் எழுதிய “ஆளுநர் – நேற்று இன்று நாளை” என்ற நூல் வெளியாகி உள்ளது.

இந்திய அரசியல் சாசனத்தின் படி குடியரசுத் தலைவரை விட, அதிகார வரம்புக்கு உட்படாதவராக திகழ்கிறார் ஆளுநர். ஏனெனில் குடியரசுத் தலைவரைக் கூட நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டுவந்து நீக்க முடியும். ஆனால் ஆளுநருக்கு எதிராக அப்படி செய்ய முடியாது. ஆளுநரின் நீக்கம் என்பது குடியரசுத் தலைவரின் விருப்பத்திற்கு உட்பட்டதாக இருக்கிறது. அரசியல் சாசனம் உருவாக்கப்படும் போது நடந்த நீண்ட விவாதத்தில் ஆளுநரின் அதிகாரங்கள், வரம்புகள் தொடர்பாக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. ஆளுநரை நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கச் செய்வது, அல்லது சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கச் செய்வது என்பது பற்றியெல்லாம் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவையெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டதன் காரணம் “தேச ஒற்றுமை“ என்பதே அந்த விவாதத்தை நன்கு கூர்ந்து படித்தால் அறிந்து கொள்ள முடியும் என்பதை தெளிவாக அவர்களுடைய உரையாடல்களைக் குறிப்பிட்டு விளக்கி உள்ளார் நூலாசிரியர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் 130 முறைக்கு மேல் கலைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் முதல்முறையாக 1976ம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான அரசு கலைக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே, மத்திய அரசு – மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுச் சிக்கல்கள், மத்திய அரசினால், எந்தவித கலந்தாய்வும் இன்றி நேரடியாக நியமிக்கப்படும் ஆளுநர் தேவையா? அவருக்கான அதிகாரங்கள் என்ன என்பது தொடர்பாக இந்தியாவிலேயே முதல்முறையாக 1969லேயே குழு அமைத்தது தமிழக அரசு. அந்த குழுவும் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளித்தது. இதுமட்டுமின்றி, மத்திய அரசே சர்க்காரியா கமிஷன், மதன் மோகன் பூஞ்சி கமிஷன் ஆகியவற்றை அமைத்தன. அரசமைப்புச் சட்டத்தின் செயல்பாட்டை மீளாய்வு செய்வதற்கான தேசிய ஆணையம் ஒன்றும் அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் அவை எல்லாம் அமல்படுத்தப்படாமல் கிடப்பிலேயே இருக்கின்றன என்பதை தமது நூலில் சுருக்கமாகவும், தெளிவாகவும் பட்டியலிட்டுள்ளார் நூலாசிரியர் வழக்கறிஞர் சுந்தரராஜன்.

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசு, 2016 முதல் 2021வரை 5 ஆண்டு காலம் செயல்பட முடியாமல் முடக்கப்பட்டது. அப்போது துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி, சட்டப்படியான தனது அதிகாரத்தை காட்டியதால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடும் முடங்கியது. இப்போது, அந்த மாநிலத்தில், அரசுக்கும் ஆளுநருக்கும் ஒரு இணக்கம் இருப்பதால் அரசின் செயல்பாடு சற்று நடக்கிறது. என்றாலும் தனிமாநில அந்தஸ்து கோரிக்கையை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இப்போதும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தங்களுடைய கட்சி தொடங்கப்பட்டதே இந்த கோரிக்கையின் அடிப்படையில் தான் என்கிறார் ரங்கசாமி.  டெல்லியிலும் இதே நிலை தான் தொடர்கிறது. அங்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் திட்டங்களை செயல்படுத்த முடியாமல் தவிக்கிறது.

தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானங்கள் ஆளுநரிடம் கிடப்பில் இருக்கின்றன. இதனால் அரசு நினைப்பதை செயல்படுத்த முடியவில்லை. அரசின் செயல்பாட்டை முடக்கிப் போடுவதைப் போலவே ஆளுநரின் செயல்பாடுகள் இருப்பதாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளால் குற்றம் சாட்டப்படுகின்றன. இது இப்போது மட்டுமல்ல, காங்கிரஸ் மத்தியில் ஆண்டபோதும் ஆளுநரின் செயல்பாடுகள் இந்த வகையிலேயே இருந்திருக்கின்றன. பலமுறை ஆளுநரின் அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும், வரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டாலும், அவை மத்திய அரசால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவே இல்லை என்பதையும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலை தொடர்ந்தால் நாட்டுக்கு என்ன ஆகும்? ஏற்கனவே ஆளுநர் பதவிகள் எப்படி இருந்தன? வரலாறு சொல்வது என்ன என்பதை தம்முடைய “ஆளுநர் – நேற்று இன்று நாளை” நூலில் ஆதாரங்களுடன் அலசி ஆராய்ந்துள்ளார் வழக்கறிஞர் சுந்தரராஜன். அத்தோடு நின்றுவிடாமல் எதைச் செய்தால் நாட்டுக்கும் மாநிலத்திற்கும் நல்லது என்பதையும் அவர் பட்டியலிட்டுள்ளார். வரலாற்றை, அரசியல் சாசனத்தை உள்ளடக்கிய இந்த நூல் தேசிய, மாநில அரசியலில் இருப்பவர்கள் மட்டுமின்றி, அரசியல் ஆர்வம் உள்ள அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. படிப்பதோடு நின்றுவிடாமல் இதை விவாதத்திற்கு உட்படுத்தி, தீர்வைக் காண வேண்டும் என்பதை நூலாசிரியரின் அவாவாக இருக்கிறது.

புத்தகம் : ஆளுநர் – நேற்று இன்று நாளை / ஆசிரியர் : வழக்கறிஞர் சுந்தரராஜன் / விலை : ரூ.120 / பதிப்பகம் : அ பதிப்பகம்

– வெற்றி நிலா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்!

Halley Karthik

இலங்கையில் முழு ஊரடங்கு அமல்

G SaravanaKumar

குஜராத்: 89 தொகுதிகளில் இன்று முதல் கட்ட தேர்தல்

G SaravanaKumar