தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்களுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என்று மக்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். ஆளுநர்களுக்கு அரசியல் சாசனத்தையும், கூட்டாட்சி முறையையும் கற்பிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 3 நாட்களாக முடக்கப்பட்ட நாடாளுமன்றம் இன்று செயல்படத் தொடங்கிய நிலையில், மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய திமுக எம்பி கனிமொழி, “ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே கலாச்சாரத்தை உருவாக்க பாஜக நினைக்கிறது! ஆனால் பாஜக நினைப்பது ஒரு போதும் நடக்காது. ஒன்றிய அரசு சர்வாதிகார போக்கை நோக்கி நகர்கிறது; இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகி வருகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்களுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை; ஆளுநர்களுக்கு அரசியல் சாசனத்தையும், கூட்டாட்சி முறையையும் கற்பிக்க வேண்டும். இந்த ஆண்டு தேர்தல் எதுவும் இல்லாததால், குடியரசுத் தலைவர் உரையில் திருக்குறள் இடம்பெறவில்லை.
இந்த நாட்டை தனது கடின உழைப்பால் உருவாக்கும் சாமானிய மக்களுக்கு மத்திய அரசு என்ன பதில் வைத்துள்ளது? மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை மூடுவதில் மகிழ்ச்சி அடைகிறது. மக்கள் இதனால் எவ்வாறு பாதிக்கப்ப்டுகிறார்கள் என்பதை அவர்கள் உணர்வதில்லை.
தனியார் மற்றும் பெரு நிறுவனங்களை மத்திய அரசு ஏன் ஆதரிக்கிறது என்று தெரியவில்லை. இதற்கான பதில்கள் கிடைக்காமல், மக்கள் தங்களது குழந்தைகளின் எதிர்காலம் குறித்து வேதனைப்படுகிறார்கள்.
27 நாடாளுமன்ற கூட்டத்தொடர்களை கடந்து வந்துவிட்டோம். ஆனால் இதுவரை பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்து இதுவரை எந்த முன்னெடுப்பும் எடுக்கப்படவில்லை.
பிரதமர் மோடி தொடர்ந்து தமிழ் மொழியின் பெருமைகள் குறித்து பேசி வருகிறார். ஆனால், சமஸ்கிருதத்திற்கு 198.83 கோடி ரூபாயும், தமிழ் மொழிக்கு 11.86 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகி வருகிறது. தேசிய அளவில் சமூக பொருளாதார அடிப்படியிலான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தினார்.







