பல்கலைக்கழக துணை வேந்தர் தேடுதல் குழுவை வாபஸ் பெற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி!

பல்கலைக் கழக துணைவேந்தர்களை தேர்வு செய்யும் விவகாரத்தில் தான் அமைத்த தேடுதல் குழுவை ஆளுநர் ஆர்.என்.ரவி திரும்பப்பெற்றுள்ளார். சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்கள் பதவி காலியாக உள்ளது.…

பல்கலைக் கழக துணைவேந்தர்களை தேர்வு செய்யும் விவகாரத்தில் தான் அமைத்த தேடுதல் குழுவை ஆளுநர் ஆர்.என்.ரவி திரும்பப்பெற்றுள்ளார்.

சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்கள் பதவி காலியாக உள்ளது. இதனை நிரப்ப, தேடுதல் குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதில், வழக்கத்தின்படி செனட் பிரதிநிதி, தமிழ்நாடு அரசின் பிரதிநிதி மற்றும் ஆளுநரின் பிரதிநிதி இடம்பெற்றிருந்தனர்.

இக்குழு தகுதி வாய்ந்தவர்களை துணைவேந்தர் பதவிக்காக ஆளுநருக்கு பரிந்துரைக்கும். இதனடிப்படையில் பல்கலைக் கழகங்களில் துணைவேந்தரை ஆளுநர் நியமனம் செய்வார். ஆனால், இந்த குழுவில் யுஜிசி உறுப்பினரும் இருக்க வேண்டும் எனக் கூறி தன்னிச்சையாக தேடுதல் குழுவை நியமித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், அண்மையில் புதுச்சேரி தொழில்நுட்ப கல்லூரி துணைவேந்தர் நியமனத்திற்கு எதிரான வழக்கில், யுஜிசி விதிகளின்படி தேடுதல் குழு நியமிக்கப்படாததால், துணைவேந்தர் நியமனம் நிலைக்கத்தக்கதல்ல என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கை சுட்டிக்காட்டியுள்ள ஆர்.என்.ரவி, தான் தன்னிச்சையாக அமைத்த தேடுதல் குழு அறிவிக்கையை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.

அத்துடன், தமிழ்நாடு அரசே யுஜிசி உறுப்பினருடன் கூடிய தேடுதல் குழுவை அமைக்கும் என நம்புவதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.