பரபரப்பான அரசியல் சூழலில், ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தியபோது அரசு தயாரித்துக் கொடுத்த சில பகுதிகளை வாசிக்காததற்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, தேசிய கீதம் பாடப்படுவதற்கு முன்பே சட்டமன்றத்தில் இருந்து ஆளுநர் வெளியேறினார். இதையடுத்து ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 11.20 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். சட்டமன்றத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழல் பற்றி பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து அவர் விளக்கமளிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரத்தில், டெல்லி பயணத்தின்போது அவர் யார், யாரையெல்லாம் சந்தித்துப் பேசுவார் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, நாளை இரவு தனது பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.








