நீட் மசோதா: முதலமைச்சருக்கு போனில் தகவல் சொன்ன ஆளுநரின் செயலர்

நீட்டில் இருந்து விலக்கு கோரும் சட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிவைத்தார். நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி…

நீட்டில் இருந்து விலக்கு கோரும் சட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிவைத்தார்.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அந்த மசோதாவை பிப்ரவரி மாதம் ஆளுநர் திருப்பி அனுப்பினார். அதனைத் தொடர்ந்து மீண்டும் நீட் விலக்கு மசோதா மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநரிடம் அனுப்பிவைக்கப்பட்டது.

நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டுமென திமுக உள்பட பெரும்பாலான கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்த கோரிக்கையை முன்வைத்து ஆளுநர் ஏப்ரல் 14ஆம் தேதி வைத்த தேநீர் விருந்தையும் தமிழ்நாடு அரசு புறக்கணித்தது.

இந்த நிலையில் சட்டமன்றத்தில் இன்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் சட்ட மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளதாக ஆளுநரின் செயலர் சற்று முன்பு எனக்கு தொலைபேசியில் தெரிவித்தார்” என்று தெரிவித்தார். உடனே அவையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் மேசையை தட்டி தங்களது வரவேற்பை தெரிவித்தனர். உள்துறை அமைச்சகம் வாயிலாக குடியரசுத் தலைவருக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நீட் மசோதா விவகாரத்தில் இது ஒரு முக்கிய நகர்வாகவே பார்க்கப்படுகிறது. எனினும், கடந்த 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டன. ஆனால், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கவில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.