தமிழகத்திற்கு நீட் விலக்கு கோரி இயற்றப்பட்ட மசோதா, இதுவரை உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆளுநர் ஆர்.என் .ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அந்த மசோதாவை பிப்ரவரி மாதம் ஆளுநர் திருப்பி அனுப்பினார். அதனைத் தொடர்ந்து மீண்டும் நீட் விலக்கு மசோதா மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநரிடம் அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் “தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்கக் கோரி சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதா குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்புவதற்காக உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கப் பெற்றதா?” என்ற கேள்வியை மக்களவையில் திமுக எம்.பி ஆ.ராசா எழுப்பினார். இவ்விவாகரத்தில் மத்திய அரசின் பதில் என்ன எனவும் அவர் கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைத்து மசோதாக்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் கையாண்டு வருகிறது. அந்த வகையில் மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு கொடுக்கப்பட்ட தகவலின் படி , நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரி தமிழக அரசால் இயற்றப்பட்டு குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதா மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கப் பெறவில்லை என்று தெரிவித்தார்.







