சில்லறை, மொத்த விற்பனையை சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME) வரம்பின் கீழ் கொண்டுவருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த இந்தியாவின் பொருளாதாரத்தை மீண்டும் பழைய வேகத்தில் இயக்குவதற்கு மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சில்லறை, மொத்த விற்பனையை சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்கள் வரம்பின் கீழ் கொண்டுவருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் கடன் பெறுவதில் சில்லறை, மொத்த விற்பனை வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவானது நாடு முழுவதும் 2.5 கோடி சில்லறை, மொத்த விற்பனை வியாபாரிகளுக்கு பயனளிக்கும் என அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்களை வலுப்படுத்துவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க அரசு முயல்வதாகவும் கட்கரி தெரிவித்துள்ளார். இந்த திருத்தப்பட்ட நெறிமுறைகள் மூலம் தற்போது சில்லறை, மொத்த விற்பனை வியாபாரிகளும் உதயம் எனும் மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்து சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சலுகைகளை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திருத்தப்பட்ட நெறிமுறைகள் சிறு குறு தொழில்கள் வளர்ச்சியில் ஒரு புதிய மைல்கல் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.







