இறுதிகட்டத்தில் இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – வெளியுறவுத்துறை செயலாளர் தகவல்…!

இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தமானது இறுதிகட்டத்தில் இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின் இடையே இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது இந்தியா – அமெரிக்க வர்த்தக உறவுகள், இரான் உடனான போர் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவுடன், ஒரு இடைக்கால தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் இறுதிக்கட்டத்தில் இந்திய உள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

இது தொடர்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பேசிதாவது: நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை வர்த்தக ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையே கடந்த ஓராண்டாக நிலவி வரும் ஒருவித நிச்சயமற்ற தன்மையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன. மேற்கு ஆசியாவில் நீடித்த அமைதியையும் பாதுகாப்பையும் காண வேண்டும் என்ற இந்தியாவின் விருப்பத்தை பிரதமர் மோடி வெளிப்படுத்தினார்.

அமெரிக்காவுடன், ஒரு இடைக்கால தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் நாங்கள் ஏற்கெனவே குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளோம். அந்த ஒப்பந்தத்தை இறுதி செய்யும் இறுதிக்கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் அடுத்த வாரம் இந்தியாவுக்கு வருகை தந்து, மேலதிக கலந்துரையாடல்களை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் எட்டப்பட்ட உடன்பாட்டின் மூலம் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை இந்தியா வரவேற்கிறது. மேலும், இப்பகுதியில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் விரைவில் திரும்பும் என நம்புகிறது. இவ்வாறு தெரிவித்தார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.