இந்தியாவின் மிகச் சிறந்த பிரதமராக இருந்திருக்க வேண்டியவர் ஜி.கே.மூப்பனார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஜி.கே.மூப்பனாரின் 21வது நினைவு நாளையொட்டி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழருவி மணியன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், ஐஜேகே தலைவர் ரவி பச்சை முத்து உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “ஜி.கே.மூப்பனாரை போல் ஒருவர் இருக்க முடியுமா என்றால், முடியாது என சொல்வேன். எந்த சூழலிலும் நேர்மையை இழக்காமல் இருந்தவர் மூப்பனார். இந்தியாவின் மிகச்சிறந்த பிரதமராக இருந்திருக்க வேண்டியவர் ஜி.கே.மூப்பனார், ஆனால், காலம் மற்றும் சூழல் காரணமாக அது நிறைவேறாமல் போனது. இதை நாம் வரலாற்றில் பதிவு செய்து கொண்டே இருக்க வேண்டும்” என்று கூறினார். தமிழ் மண்ணில் பிறந்து இந்திய அளவில் பேச கூடிய தலைவர்கள் மிக குறைவு, அதில் ஜி.கே.மூப்பனார் ஒருவர் எனவும் அண்ணாமலை புகழாரம் சூட்டினார்.
முன்னதாக பேசிய தமிழருவி மணியன், “காமராஜருடைய பாதையில் தமாகாவை வழி நடத்தியவர். அவரை போல் எளிமையான தலைவரை நான் பார்த்ததில்லை. வாரி வாரி வழங்கிய வள்ளல் அவர். அகில இந்திய அளவில் காமராஜருக்கு பிறகு காங்கிரஸ் காட்சியில் செல்வாக்கு மிக்கவராக இருந்தார் ஜி கே மூப்பனார்” என கூறினார்.