இந்தியா தமிழகம்

1996 தேர்தல் – கருணாநிதி 4வது முறையாக முதலமைச்சரான தினம்

1996 ஆம் ஆண்டை சாதாரணமாக மறக்க முடியாது ஏனென்றால் தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிசயங்கள் நடந்தது இந்தாண்டே.

1996ஆம் ஆண்டு அதிமுக – காங்கிரஸ் கூட்டணியை தடாலடியாக அறிவிக்கிறார் அன்றைய பிரதமர் நரசிம்மராவ். ஒற்றைத் தலைமைதான் தமிழகத்தை பொறுத்தவரை நிலைத்து நிற்கும் கட்சியாக கருதப்படுகிறது. ஆனால் கோஷ்டிகளுக்கு பஞ்சமில்லாத காங்கிரசில், அதிமுகவுடான கூட்டணியை காங்கிரஸ் முன்னனி தலைவர்களான ஜி.கே.மூப்பனார், ப.சிதம்பரம் உள்ளிட்டோர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்கும் சேர்ந்து தேர்தல் அறிவிக்கப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

காங்கிரஸ் 30 இடங்களும் அதிமுக 10 இடங்களும் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டு தேர்தலுக்கு தயார் ஆகிறது. கட்சியின் இந்த போக்கை கண்டித்து காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுகிறார் ஜி.கே.மூப்பனார். புதிதாக தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியையும் நிறுவினார்.

திமுகவு கூட்டணியிலும் இணைந்தது தமாக. சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி உடன்பாட்டில் திமுக 182 இடங்களிலும் தமாக 40 இடங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் 11 இடங்களிலும் பார்வர்டு பிளாக் 1 இடங்களிலும் போட்டியிட்டது.

நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த மட்டில் திமுக 17இடங்களிலும், தமாக 20இடங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் 3இடங்களிலும் போட்டியிட்டது. பாமக – மதிமுக கூட்டணி உடன்பாடு எட்டப்படாத நிலையில் பாமக 116 இடங்களில் போட்டியிட்டது.

மதிமுக- மார்சிஸ்ட்- ஜனதாதளம் கூட்டணி அமைத்தது. களம் மிகவும் சூடானது; சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள்தான் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோர் என்பதால் ரஜினியின் குரலும் அப்போது மிக முக்கியமாக கருதப்பட்டது. நடிகர் ரஜினிகாந்த் உச்சகட்ட புகழில் இருந்த காலம் அது தாமகவிற்கு ஆதரவாக அதாவது திமுக கூட்டணிக்கு ரஜினிகாந்த் முதன் முறையாக குரல் கொடுக்கிறார். ஒரு கலைஞன் வெறும் கலைஞனாக மட்டுமில்லாமல் சமூக பங்களிப்பாக அரசியலில் கால்பதிக்கிறார். ரஜினி ரசிகர்கள் பிரச்சார பீரங்கிகளாக செயல்பட்டனர்.

மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் மட்டும் 1033 பேர் போட்டியிட்டனர். அரசாங்கம் தங்களுக்கு சரியான படி தண்ணீர் கிடைப்பதில் ஆர்வம் காட்டாததால் விவசாயிகள் 1028 பேர் சுயேச்சைகளாக போட்டியிட்டனர். வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் இத்தொகுதிக்கு மட்டும் தேர்தல் மற்ற தொகுதிகளோடு சேர்ந்து நடக்கவில்லை. 1996 மே 2ம் தேதி நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் மே12 ம் தேதி அறிவிக்கப்பட்டது.

திமுக போட்டியிட்ட 182 தொகுதியில் 167 இடங்களில் வெற்றி பெற்றது. 40 தொகுதியில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் 39 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 8 இடங்களிலும், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட இந்திய தேசிய லீக் 5 இடங்களிலும் மற்றும் பார்வர்டு பிளாக் 1 இடங்களிலும் வெற்றி பெற்றது. திமுக கூட்டணி மொத்தம் 220 இடங்களை கைப்பற்றியது. நில அபகரிப்பு மற்றும் பொது சொத்துக்களை கையகப்படுத்துதல், போன்ற சம்பவங்கள், ஊராட்சி ஒன்றிய தலைமைக்கு வண்ண தொலைக்காட்சி வாங்கியவை போன்ற ஊழல்கள் அதிமுக ஆட்சியையும் ஜெயலலிதா மீது வழக்காக சுப்ரமணியசாமியால் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. இவை தேர்தலில் எதிரொலித்தது. அதுபோக ரஜினியின் வாய்ஸ் பெரிதும் பேசப்பட்டது. அதிமுக 4 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தோல்வியடைந்தார். காங்கிரஸ் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது. வாழப்பாடி ராமமூர்த்தியின் இந்திரா காங்கிரஸ்- பாமக கூட்டணியில் பென்னாகரம், தாராமங்கலம், திண்டுக்கல், ஆண்டிமடம் உள்ளிட்ட 4 தொகுதிகளை பாமக கைப்பற்றியது.

மதிமுக பொதுச்செயலாளர் விளாத்திகுளத்தில் 634 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். மேலும் ஒரு இடங்களை கூட கைப்பற்றாத மதிமுக, அதன் கூட்டணியில் இடம்பெற்ற ஜனதா தளம், மார்க்சிஸ்ட் தலா 1 இடங்களில் வெற்றி பெற்றது. தனித்து களம் கண்ட பாஜக, பத்மநாபபுரம் தொகுதியில் முதல் வெற்றியை பதிவு செய்தது. அக்கட்சி சார்பாக போட்டியிட்ட வேலாயுதம் திமுக வேட்பாளரை 4,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் முடிவிலும் 39 தொகுதிகளை கைப்பற்றியது திமுக கூட்டணி. 13 மே 1996 அன்று நான்காவது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.கருணாநிதி பதவியேற்றார் அவருடன் 23 பேர் கொண்ட அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர்.

– மா.நிருபன் சக்கரவர்த்தி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பணம் பறித்த வழக்கில் காவல் ஆய்வாளரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

G SaravanaKumar

சர்வதேச வன தினம்; கடலில் விடப்பட்ட ஆமைக்குஞ்சுகள்

G SaravanaKumar

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது

Gayathri Venkatesan