தமிழகத்தை ஒருமுறை பாஜக கையில் கொடுத்துப் பாருங்கள்! ஊழல் இல்லாத ஆட்சியை தருகிறோம்! – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

தமிழகத்தை ஒருமுறை பாஜக கையில் கொடுத்துப் பாருங்கள். ஊழல் இல்லாத ஆட்சியை தருகிறோம் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.  பாரதிய ஜனதா ஆட்சியின் 9 ஆண்டுக்கால சாதனை விளக்கக்கூட்டம் சென்னை…

தமிழகத்தை ஒருமுறை பாஜக கையில் கொடுத்துப் பாருங்கள். ஊழல் இல்லாத ஆட்சியை தருகிறோம் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். 

பாரதிய ஜனதா ஆட்சியின் 9 ஆண்டுக்கால சாதனை விளக்கக்கூட்டம் சென்னை அடுத்த தாம்பரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய ராஜ்நாத் சிங் தமிழில் பேச முடியாததற்கு வருந்துவதாக தெரிவித்தார். தொடந்து பேசிய அவர் திருக்குறள் என்கிற ஒப்பற்ற நூலை எழுதிய திருவள்ளுவர் பிறந்த தமிழகத்திற்கு வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. செங்கோல் தமிழகத்தின் பெருமையாக மட்டுமே இருந்தது. அதை நாடாளுமன்றத்தில் நிறுவியதால் நாடு முழுவதும் செங்கோலின் பெருமை பரவியது.

நமது பிரதமர் மோடி திருக்குறளில் இருந்து பலக் கருத்துகளை எடுத்து அமல்படுத்தி வருகிறார். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் நாடு வளர்ந்து வந்துள்ளது. ஆனால் போதிய வேகத்தில் வளர்ச்சி அடையவில்லை. தற்போது ஒவ்வொரு நிகழ்விலும் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து உலகமே கவனிக்கும் வகையில் நாடு வளர்ந்திருக்கிறது.

நாட்டில் தனி நபர் வருமானம் அதிகரித்துள்ளது. 2047 ஆண்டிற்குள் இந்தியா பொருளாதாரத்தில் வளர்ந்த நாடாக விளங்கும். கொரோனா காலத்தில் உலகமே முடங்கி இருந்தபோதும் கூட பொருளாதரத்தில் முடங்கி விடாமல் பிரதமர் பார்த்துகொண்டார். 2013- 14 ஆண்டுகளில் ரூ.900 கொடி அளவுக்குதான் தான் பாதுகாப்பு சாதனங்கள் ஏற்றுமதி நடைப்பெற்றுள்ளது. ஆனால் தற்போது ரூ.16 ஆயிரம் கோடி அளவில் ஏற்றுமதி நடைபெற்று வருகின்றது. இந்தியா எந்த நாட்டுடனும் வீண் பிரச்னைக்கு போகாது. ஆனால் இந்தியாவை எந்த நாடாவது தொட்டால் சுமா விடாது.

74 விமான நிலையம் மட்டுமே இருந்த நிலையில் 9 ஆண்டுகளில் கூடுதலாக 74 விமான நிலையம் அமைக்கப்பட்டு தற்போது 148 விமான நிலையங்கள் உள்ளன.
மெட்ரோ ரெயில் என்றாலே ஜப்பானை உதாரணம் காட்டிவந்த நிலையில் தற்போது இந்தியாவை உதாரணம் காட்டும் அளவிற்கு மெட்ரோ ரெயில் சேவை விரிவு படுத்தப்பட்டுள்ளது. மோடி பிரதமராகிய போது 7 எய்ம்ஸ் இருந்தநிலையில் தற்போது 9 ஆண்டில் 27 எய்ம்ஸ் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தை ஆளும் திமுக எந்த அளவுக்கு ஊழல் செய்து வருகின்றது என நாடு முழுவதும் கவனித்து வருகிறது. தமிழகத்தை ஒருமுறை பாஜக கையில் கொடுங்கள். ஊழல் இல்லாத ஆட்சியை கொடுப்போம். பாஜகவில் ஊழல் செய்தால் அவர் ஆட்சி கட்டிலில் இருக்கமாட்டார். சிறைச்சாலையில் இருப்பார். அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக செந்தில்பாலாஜியை பழிவாங்க மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் பேசி வருகின்றார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் தான் கடந்த அதிமுக ஆட்சியின் போது செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்கம் பக்கமாக பேசினார்.

பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா மீது கைது நடவடிக்கையில் ஈடுபட்டது ஏன்? ஸ்டாலின் என்றே பெயருக்கு சர்வதிகாரி என்று அர்த்தம். அதன்படியே அவர் செயல்படுகின்றாரா? என்று ராஜ்நாத் சிங் வினவினார்.

தொடர்ந்து பேசிய அவர் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அதிமுகவுக்கு தகுந்த மரியாதை அளிப்போம் என்றார். அண்ணாமலை தமிழகத்திற்கு மட்டும் தலைவர் அல்ல, இந்தியாவிற்கே தலைவர் என்று அவரை புகழ்ந்த ராஜ்நாத் சிங், பாரத பிரதமரின் கட்டளைக்கு இணங்க அவர் தமிழகத்தில் செயலாற்றி வருவதற்கு அண்ணாமலையை எவ்வளவு பாராட்டினாலும் தகும் எனக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.