தேனி அருகே ஓடைப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால், பள்ளத்தில் விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் சம்மந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில் உள்ள தாத்தா வீட்டிற்கு 8 வயது சிறுமி ஹாசினி ராணியை அவரது தாயார் கார்த்திகா அழைத்து வந்துள்ளார். அப்போது, வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுமி இயற்கை உபாதை கழிக்க சென்றநிலையில், மீண்டும் வீடு திரும்பவில்லை.
ஓபிஎஸ் கண்டனம்
பின்னர் உறவினர்கள் சென்று பார்த்தபோது, அங்கு பூங்கா அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிறுமி உயிரிழந்தது தெரியவந்தது. பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் நீண்ட நாட்களாக பள்ளங்களை மூடவில்லை என குற்றம்சாட்டிய அப்பகுதி மக்கள், சிறுமி உயிரிழப்பை மாவட்ட நிர்வாகம் மறைக்க பார்ப்பதாகவும் வேதனை தெரிவித்தனர்.
https://twitter.com/OfficeOfOPS/status/1567450610496307200
நிவாரணம் வழங்குக
இந்நிலையில், சிறுமியின் உயிரிழப்பு மனவேதனையை ஏற்படுத்திவிட்டதாகவும், அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், சிறுமியின் உயிரிழப்புக்கு ஓடைப்பட்டி பேரூராட்சி நிர்வாகமே காரணம் என்பதால், சிறுமியின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் மற்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
சிறுமியின் உயிரிழப்பு குறித்து நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன், ஒவ்வொரு வீட்டிற்கும் கழிப்பறை வேண்டும் என்று Swachh Bharat திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான கழிப்பறைகள் கட்ட திட்டமிருந்தாலும் கூட, இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டு இருப்பது வேதனை அளிக்கிறது என்றார்.
வீடியோவாக காண – வானதி சீனிவாசன் பேட்டி
சிறுமி ஹாசினியின் உயிழப்புக்கு தகுந்த இழப்பீட்டை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணமாகவும், அலட்சியமாகவும் இருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எனது கோரிக்கை என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
https://twitter.com/Narayanan3/status/1567440502634708993?t=EOPLaCoqxgGJ7812KPrAOA&s=08
சென்னையில் மரணப் பள்ளங்கள்
இதேபோல், சிறுமி உயிரிழப்பு தொடர்பான நியூஸ் 7 தமிழ் செய்தியை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, அலட்சியமான நிர்வாகம் மீது கொலை வழக்கு பதிவு செய்து காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் சென்னையிலும் மழை நீர் வடிகால்வாய்க்காக தோண்டப்பட்டுள்ள இது போன்ற ஆயிரக்கணக்கான மரணப் பள்ளங்கள் உள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
– இரா.நம்பிராஜன்








