ஓமலூர் அருகே அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி தனது குடும்ப வறுமையை செல்போனில் உருக்கமாகப் பேசிவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி தாலுகா, பூசாரிப்பட்டி
பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி யசோதா. இவர்களுக்கு கௌசிகா என்ற 14 வயது மகள் உள்ளார். இவர் பண்ணப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். முருகன் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு முருகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார். இதைத்தொடர்ந்து பள்ளி மாணவி கௌசிகாவின் தாய் யசோதா கூலி வேலைக்குச் சென்று தனது மகளை வளர்த்து வந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு யசோதா அறுவை சிகிச்சை செய்து தனது தாய் வீட்டில் இருந்து வருகிறார். இதன் காரணமாக பள்ளி மாணவி பாட்டி வீட்டில் இருந்து பள்ளிக்குச் சென்று வருகிறார். இந்நிலையில், இன்று பள்ளிக்குச் செல்ல இருந்த நிலையில் வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் பார்த்து பள்ளி மாணவியை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினர்.
இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில், பள்ளி மாணவி ஒரு துண்டுச் சீட்டில் இறப்பதற்கான காரணம் குறித்து தனது செல்போனில் பேசி வைத்துள்ளதாகவும், அந்த செல்போனின் பாஸ்வேர்டு எண்ணையும் எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரது
செல்போனில் பதிவு செய்திருப்பதை கேட்டபோது அதில் என் பெயர் கௌசிகா, என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் அல்ல, எனது அம்மா என்னால் நிறைய கஷ்டப்பட்டு உள்ளார். யாருக்கும் கஷ்டம் கொடுக்கக் கூடாது என்று நினைத்து நான் இந்த முடிவு எடுக்கிறேன். என்னை மன்னித்து விடு அம்மா. நீ நன்றாக இரு. நல்லா சாப்பிடு நீ இங்கிருந்தாலும் சரி அல்லது உன் அக்கா வீட்டில் இருந்தாலும் சரி நான் உன் கூட துணையாக இருப்பேன்.
அடுத்ததாக சஞ்சய். நீ எனக்கு கிடைத்தது பெரிய கிப்ட். நல்லா படிக்க வேண்டும். என்னை மறந்து விடாதே. உன் கூட துணையாக நான் எப்போதும் இருப்பேன். அடுத்து ஆனந்தி அம்மா. நான் உன்னை எப்பொழுதும் தப்பாக சொல்லவில்லை. என்னை நன்றாக பார்த்துக் கொண்டதற்கு ரொம்ப நன்றி. ஜீவாவை நன்றாக படிக்க வையுங்கள்.
நான் எப்போதும் ஜீவாவுக்கு துணையாக இருப்பேன். ஜீவா அப்பா நீங்கள்
குடிக்காதீர்கள். எங்க அப்பா இப்படி தான் குடித்து குடித்து வீணாகிவிட்டார். அடுத்து என்னுடைய பிரண்ட்ஸ் தர்ஷினி நீ கிடைத்தது எனக்கு பெரிய கிப்ட். நீ என்னை மறந்து விடாதே நன்றாக படிக்க வேண்டும்.
தர்ஷினி, அஸ்வின் என பல நண்பர்கள் பெயரை கூறி நன்றாக படிக்க வேண்டும். எனக்கு பெஸ்ட் பிரண்ட் நீங்கள்தான் என பேசிவிட்டு, இறுதியாக தனது ஆயா நான் உன்னை விட்டுச் செல்கிறேன் என்னை மன்னித்துவிடு நீ நன்றாக இரு. அடுத்ததாக எனது சித்தி நீங்க நல்லா இருக்கணும். நான் சித்தப்பாவிடம் கனவில் வந்து சொல்லுவேன் சித்தப்பா குடிக்கமாட்டார். நான் யாரையும் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. நான் சாகிறேன் என உருக்கமாக பேசிவிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
குடும்ப வறுமை காரணமாக மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-ம.பவித்ரா