பேரூராட்சி அலட்சியம்: பூங்கா அமைக்க தோண்டிய பள்ளத்தில் விழுந்து 8 வயது சிறுமி உயிரிழப்பு

தேனி அருகே பூங்கா அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்தார். பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் சிறுமியின் உயிர் பரிபோனதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.   தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி…

தேனி அருகே பூங்கா அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்தார். பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் சிறுமியின் உயிர் பரிபோனதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில் வசித்து வருபவர் ரங்கநாதன். இவரது மகள் கார்த்திகா மூலக்கடை பகுதியில் வசித்து வருகிறார். கார்த்திகாவின் மகள் 8 வயது சிறுமியான ஹாசினி ராணி, தாத்தாவான ரங்கநாதன் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுமி ஹாசினி ராணி இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார்.

 

நீண்ட நேரமாகியும் சிறுமி திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர். அப்போது, ஹாசினியின் காலில் மாட்டியிருந்த செருப்பு அங்குள்ள தண்ணீர் நிறைந்த ஒரு பள்ளத்தில் மிதந்துள்ளது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், பள்ளத்தில் இறங்கி பார்த்தபோது, சிறுமி நீரில் மூழ்கியிருந்தது தெரியவந்தது. பின்னர் சிறுமியை மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

சிறிது நேரத்திற்கு முன்பு சிரித்து விளையாடிகொண்டிருந்த அந்த பிஞ்சு, பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஓடைப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் அப்பகுதியில் பூங்கா அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தான் சிறுமி ஹாசினி விழுந்து உயிரிழந்துள்ளார்.

 

7 அடி கொண்ட அந்த பள்ளத்தில் மழைநீர் அதிகளவில் இருந்ததால் சிறுமி வெளியே வரமுடியாமல் நீரில் மூச்சு திணறி இறந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, சிறுமி உயிரிழப்புக்கு பேரூராட்சி நிர்வாகமே காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சிறுமி மூழ்கிய நிலையில், அங்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் வரவில்லை எனவும் தெரிவித்தனர். பூங்கா அமைக்கும் பணிக்காக எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

சிறுமி உயிரிழந்த தகவல் கிடைத்ததுமே, ஓடைப்பட்டி பேரூராட்சி தலைவர் தனுஷ்கோடியிடம் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேரடியாக சென்று விளக்கம் கேட்டார். அதற்கு அவர் அளித்த பேட்டியில், குழந்தையின் இறப்பு வருத்தமளிக்கிறது. இதற்கு சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

இந்த பூங்கா அமைக்கும் பணிகள் ஓராண்டுக்கு முன்பு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாகவும், 6 மாதத்திற்கு முன்பே முடிக்கப்பட வேண்டியது. போதுமான பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் குழிக்குள் விழுந்து குழந்தை இறந்துள்ளது. சிறுவர்கள் அதிகம் விளையாடும் பகுதியில் குழி தோண்டப்பட்டுள்ளது. போதுமான வேலி அமைத்து பாதுகாப்பாக பணிகளை முடிக்க ஏற்பாடு செய்யப்படும் என மழுப்பலாக பதிலளித்தார்.

 

மேலும் ஒப்பந்த பணி தனது பதவி காலத்தில் நடைபெறவில்லை என தனுஷ்கோடி விளக்கமளித்தார். இதனிடையே, சிறுமி உயிரிழந்த விவகாரம் தேனி மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால், ஒரு சிறுமியின் உயிர் பரிதாபமாக பறிபோனதாக வேதனைபடும், அப்பகுதி மக்கள், இனியாவது பொது இடங்களில் பள்ளம் தோண்டும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.