இளைஞர்களைக் குறிவைத்து மோசடி: போர்க்கால நடவடிக்கை தேவை – ஓபிஎஸ்

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவில் வேலைவாய்ப்பு எனக்கூறி கிராமப்புற இளைஞர்களைக் குறிவைத்து மோசடியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவில் வேலைவாய்ப்பு எனக்கூறி கிராமப்புற இளைஞர்களைக் குறிவைத்து மோசடியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விலைவாசி உயர்வு, ஒமிக்ரான் அச்சம் உள்ளிட்ட பல இன்னல்களுக்கு மக்கள் ஆளாகி வரும் சூழலில் போலி வேலைவாய்ப்பு புதிதாக உருவெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவில் வேலைவாய்ப்பு எனக்கூறி கிராமப்புற இளைஞர்கள் குறிவைத்து மோசடி பேர்வழிகள் ஈடுபட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிப்பதாகவும், இதுபோன்ற மோசடிகளை தடுக்க காவல்துறையினர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மோசடியில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களின் பணம் அவர்களிடமே திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுபோன்ற மோசடிகள் தமிழ்நாட்டில் வேறு எந்த பகுதியில் நடைபெறுகிறது என்பதை காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு அளித்துள்ள புகார் மீது முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.