ஆயுர்வேத மருத்துவரை ஓர் ஆண்டு காலமாக சித்திரவதை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர்.
கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது வீட்டில் இருந்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொபைல் போன்கள், மடிக்கணினி திருடு போயுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதே நேரத்தில், திருவனந்தபுரம் தலைமை செயலகம் முன், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தன்னை காப்பாற்ற வேண்டும் எனவும் தீ குளிக்க முயற்சி செய்துள்ளார் தொழிலதிபரின் நண்பர்.
இந்த இரண்டு சம்பவங்களையும் தொடர்புபடுத்தி போலீசார் நடத்திய விசாரணையில், தொழிலதிபரின் வீட்டில் இருந்து திருடப்பட்டது மொபைல் போன்கள் அல்ல தொழிலதிபர் செய்த மூன்று கொலைக்கான ஆவணங்கள் என பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.
3 கொலைகளை அரங்கேற்றிய அந்த தொழிலதிபர் யார்.?
கேரள மாநிலம், வயநாடு பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ஷபீன் அஷ்ரப். இவருக்கு உடல் நிலை சரியில்லாததால், கர்நாடகா மாநிலம் மைசூர் வசந்தநகரி பகுதியை சேர்ந்த, ஆயுர்வேத மருத்துவர் ஷாபா ஷெரிப் என்பவரிடம் சிகிச்சை பெற்று வந்தார். மூலம் நோயை, மூலிகையில் மருந்து தயாரித்து குணப்படுத்துவதில் புகழ் பெற்றவர் ஷாபா ஷெரிப்.
இவர் மூலம் நோய்க்கு மருந்து கண்டுபிடித்த ரகசியத்தை கூறினார். இந்த மருந்து மூலம் வெளிநாடுகளில் பல கோடி ரூபாய் சம்பாதிக்கலாம் எனவும், கேரளாவில் மருத்துவமனை துவங்கலாம் எனவும் மருத்துவர் ஷாபா ஷெரிப்பிடம் கூறி இருக்கிறார் ஷபீன் அஷ்ரப். ஆனால் அதற்கு மருத்துவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
டாக்டர் கடத்தி கொலை
இதனால் ஆயுர்வேத மருத்துவரை தன்வழிக்கு கொண்டு வர, ஷபீன் அஷ்ரப், அவரது நண்பரான நவ்சாத்துடன் கடத்த திட்டமிட்டுள்ளார். அதன் படி கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் கேரளாவில் ஒருவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் எனக்கூறி மைசூரில் இருந்த மருத்துவரை அழைத்து வந்துள்ளனர்.
கேரளா மாநிலம் நிலம்பூரில் உள்ள ஷபீன் அஷ்ரப் வீட்டில் ஆயுர்வேத மருத்துவரை சங்கிலியால் கட்டிப்போட்டு, மூலம் நோய்க்கு மருந்து தயாரிக்கும் ரகசியத்தை கூறும் படி கேட்டுள்ளனர்.
உணவு கொடுக்காமல் சித்திரவதை செய்து துன்புறுத்தியுள்ளனர். ஆனால் மருந்து தயாரிக்கும் ரகசியத்தை கூறாமல் உறுதியாக இருந்துள்ளார் மருத்துவர். ஆத்திரம் அடைந்த ஷபீன் அஷ்ரப் அவரது நண்பர்கள், மரம் அறுக்க பயன்படுத்தும் இயந்திரத்தை கொண்டு ஆயுர்வேத மருத்துவரை துண்டாக வெட்டி, சாக்கில் கட்டி, நிலம்பூர் சல்லியாற்றில் வீசியுள்ளனர்.
ஆயுர்வேத மருத்துவரை நண்பர்களின் உதவியுடன் கொலை செய்து விட்டு, ஷபீன் அஷ்ரப் அபுதாபி சென்றுள்ளார். அங்கும் தொழில் போட்டியில் ஹாரிஸ் என்பவரையும் அவரது பெண் நண்பரையும் ஷபீன் அஷ்ரப் கொலை செய்ததாக நவ்சாத்திடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
சிக்கியது எப்படி?
மருத்துவரை கொலை செய்த சம்பவத்தில் தனக்கும் கூட்டாளிகளுக்கும் பேசிய படி பணம் கொடுக்காமல் ஷபீன் அஷ்ரப் ஏமாற்றி வந்துள்ளார். அவரிடம் பணம் கேட்ட போது கொலை செய்து விடுவதாக தன்னை மிரட்டியதால், நவ்சாத் கொலைக்காண ஆவணங்களை திருடியதும் விசாரணையில் அம்பலமானது. கொலைக்கான வீடியோ மற்றும ஆவணங்களை கைப்பற்றிய போலீசார், ஷபீன் அஷ்ரப் மருத்துவரை கொலை செய்ய உதவியாக இருந்த ஷிஹாபுதின், நிஷாத் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய அஜ்மல், சமீம் போரி, பாசில், சபிக் சிறா, ஷாகாப் ரகுமான் ஆகியோர் கடந்த ஒரு மாதமாக தமிழ்நாட்டில் தலைமறைவாக வாழ்வதாகவும் கேரள போலீசாருக்கு தகவல் கிடைத்து. தமிழ்நாட்டு காவல்துறையின் உதவியுடன் குற்றவாளிகளை பிடிக்க தமிழ்நாட்டில் கேரள காவல்துறையினர் முகாமிட்டுள்ளனர். குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் ஆயுர்வேத மருத்துவர் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் தமிர்நாட்டில் பதுங்கி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.








