பிரதமர் மோடி உள்ளிட்டவர்களுக்கு விஜயகாந்த் நன்றி

தனது உடல் நலம் குறித்து விசாரித்த பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு தீவிர அரசியிலில்…

தனது உடல் நலம் குறித்து விசாரித்த பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு தீவிர அரசியிலில் ஈடுபடாமல் ஓய்வில் உள்ளார். நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த அவர் சமீபத்தில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அப்போது பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதாவை  தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

தற்போது சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ள விஜயகாந்த், தனது உடல் நலம் குறித்து விசாரித்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   தனது உடல் நலம் குறித்து  தொலைபேசி வாயிலாக விசாரித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு  தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். மேலும்,  தெலுங்கானா, புதுச்சேரி மாநில ஆளுநர்  தமிழிசை சவுந்தரராஜன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,  பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை,  அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன், வி.கே.சசிகலா, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். மேலும் தனது உடல் நிலை குறித்து விசாரித்த  நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ் உள்ளிட்டோருக்கும், தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.