“முதல்வர் விஜய் ஒரே ஒரு ஃபைல் ஓப்பன் பண்ணதுக்கே முன்னாள் அமைச்சர் கைது!” – அமைச்சர் நிர்மல் குமார்

முதல்வர் விஜய் ஒரே ஒரு ஃபைல் ஓப்பன் பண்ணதுக்கே முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு கடந்த திமுக ஆட்சியின்போது, நிரந்தர அங்கீகாரம், பள்ளிகள் தரம் உயர்த்துதல் மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் முறைகேடாக பணம் வசூலிக்கப்பட்டதாகப் முன்னாள் பள்ளிக் கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் மீது புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் அன்பில் மகேஷுக்கு சொந்தமான இடங்களில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

இதனிடையே முன் ஜாமின் கோரி அன்பில் மகேஷ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் முன் ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்த நிலையில் நேற்று அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு உயர்நீதிமன்றம் சிறப்பு அமர்வில் ஆஜர் செய்யப்பட்டார். அப்போது நீதிபதிகள் அன்பில் மகேஷுக்கு நவ.6-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்த நிலையில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், “பார்ட்டி ஃபன்ட், பார்ட்டி ஃபன்ட் என்றும், நாங்கள் எங்கே வாங்கினோம் என்று திமுகவினர் பேசிக்கொண்டிருந்தனர். முதலமைச்சர் விஜய் மூன்று கோப்புகளை எப்போது திறப்பார் என்று கேட்டுக்கொண்டிருந்தனர்.ஒரே ஒரு ஃபைல் ஓப்பன் பண்ணதுக்கே முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது திமுகவுக்கே அவமானம்; குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பள்ளிக்கல்வித்துறை கொடுக்கும் சான்றிதழுக்காக பார்ட்டி ஃபண்ட் வாங்கியுள்ளார்கள். பள்ளிக்கல்வித்துறையில் மட்டும் ஓராண்டில் சுமார் ரூ. 400 கோடி அளவுக்கு லஞ்சம் என்றால் மற்ற துறைகளைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் முதலமைச்சர் விஜய்யிடம் சவால் விட்டார்கள். முதல்வர் விஜய்யிடம் இன்னும் பல கோப்புகள் விசாரணையில் இருக்கின்றனர். நடவடிக்கைகள் தொடரும்

‘கரூரிலேயே இவர்களை போட்டிருக்க வேண்டும்’ என்று திமுகவினர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று பேசினார்கள்; அப்படியென்றால் கரூரில் திமுகவினர் என்ன ப்ளான் செய்தார்கள்; அன்பில் மகேஸ் மீதான வழக்கை திமுகவினர் நேர்மையாக எதிர்கொள்ள வேண்டும்; இப்படி பேசுவது என்பது வெட்கக் கேடானது” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.