தேனி சிறைக் கைதிகள் தப்பியோட்டம் – நடந்தது என்ன?

தேனி சிறையில் இருந்து சிறைக்காவலர்களைத் தாக்கிவிட்டுத் தப்பிய 17 கைதிகளில் 4 பேர் பிடிபட்டுள்ளனர். எஞ்சிய கைதிகளைப் பிடிக்க ட்ரோன் மூலம் தீவிர தேடுதல் நடைபெற்று வருகிறது.

தேனி மாவட்ட சிறையில் ஒரே பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த 17 சிறைவாசிகள், சிறைக்காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களைப் பிடிக்கத் தமிழக காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

சிறையில் நடந்தது என்ன?

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, தேக்கம்பட்டி அருகே தேனி மாவட்ட சிறை செயல்பட்டு வருகிறது. 4 பிளாக்குகளாக அமைந்துள்ள இந்தச் சிறையில் 100-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவில் 3-வது பிளாக்கில் இருந்த சிறைவாசி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகத் தகவல் வந்தது. இதையடுத்து, சிறப்பு சார்பு ஆய்வாளர் மதன்மோகன் சிறைப் பிளாக்கின் கதவைத் திறந்துள்ளார். அப்போது, சிறிது நேரத்திலேயே அந்தப் பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த 17 சிறைவாசிகள் தப்பியோடினர். மேலும், அவர்கள் சிறைக்காவலர்கள் இருவரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

தப்பியோடிய 17 சிறைவாசிகள்

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்ற மதன், சிவகங்கை மாவட்டம் சுந்தர நடப்பு பகுதியைச் சேர்ந்த தருண்குமார், மதுரை சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையைச் சேர்ந்த பாண்டி செல்வம், மதுரை காமராஜபுரத்தைச் சேர்ந்த திருப்பதி, மதுரை TNHB காலனியைச் சேர்ந்த பொன்முத்து செல்வம், மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம், சேலம் மாவட்டம் தடகப்பாடியைச் சேர்ந்த சபரிநாதன், கன்னியாகுமரி மாவட்டம் தளவாய்புரத்தைச் சேர்ந்த ரெஜின், மதுரை கீழக்குயில்குடியைச் சேர்ந்த நிஷாந்த், மதுரை வாடிப்பட்டி முள்ளிப்பள்ளத்தைச் சேர்ந்த முத்து இளங்கோவன், மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் ராஜா, மதுரை ஆளவந்தானைச் சேர்ந்த பிரசாந்த் என்ற லிங்க பிரசாத், மதுரை மேலமடையைச் சேர்ந்த ராஜா சிக்கந்தர், தேனி மாவட்டம் தேவாரத்தைச் சேர்ந்த சிலம்பரசன், மதுரை வாழைத்தோப்பைச் சேர்ந்த சோலை முகிலீஸ்வரர் மற்றும் தேனியைச் சேர்ந்த பிரவீன்குமார் ஆகிய 17 பேர் தப்பியோடியுள்ளனர்.

காயமடைந்த காவலருக்கு சிகிச்சை

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் மதன்மோகன், கானாவிலக்கு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். சம்பவம் குறித்து விசாரணை நடத்த தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி நேரில் சென்றார். இரவு முழுவதும் தீவிர விசாரணை மேற்கொண்ட அவர், தப்பியோடிய சிறைவாசிகளைப் பிடிக்க 17 சிறப்புத் தனிப்படைகளை அமைத்தார்.

4 பேர் கைது; மற்றவர்களுக்குத் தீவிர தேடுதல்

தப்பியோடிய 17 பேரில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன்குமார், தேவாரத்தைச் சேர்ந்த சிலம்பரசன், மதுரை மேலமடையைச் சேர்ந்த ராஜா சிக்கந்தர், மதுரை சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீதமுள்ளவர்களைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கேரள மாநில எல்லைப் பகுதிகளிலும், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களிலும் காவல்துறையினர் இரவு முழுவதும் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். மேலும், இன்று காலை முதல் ட்ரோன்கள் மூலம் சிறையை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளில் தப்பியோடியவர்கள் பதுங்கியுள்ளனரா எனத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பேருந்து நிலையங்களில் தீவிர கண்காணிப்பு

தப்பியோடியவர்களில் 11 பேர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், மதுரை மாவட்ட எல்லைப் பகுதிகளிலும் வைகை ஆற்றை ஒட்டிய பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம், கன்னியாகுமரி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சிறைவாசிகளும் தப்பியுள்ளதால், தேனி, ஆண்டிபட்டி, கம்பம் பேருந்து நிலையங்கள் மற்றும் மதுரை மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம்,
பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்

தப்பியோடிய சிறைவாசிகள் குறித்துப் பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால், தேனி மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்தை 9498101570 என்ற எண்ணிலும், தேனி மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறையை 9176104100 என்ற எண்ணிலும் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனத் தேனி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் சிறைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு

தேனி மாவட்ட சிறையில் 17 சிறைவாசிகள் தப்பியோடிய சம்பவத்தைத் தொடர்ந்து, பாளையங்கோட்டை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இன்று நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட உள்ள குற்றவாளிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

திட்டமிட்டுத் தப்பினார்களா?

ஒரே பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த 17 சிறைவாசிகளும் ஒரே நேரத்தில் தப்பியோடியுள்ளதால், இந்தச் சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடியவர்கள் மூலம் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், அவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அவர்களின் குற்றப் பின்னணி மற்றும் தொடர்புகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தப்பியோடிய 17 பேரில் பலர் 30 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்தது, கொலை மற்றும் கொள்ளை முயற்சிகளில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இவர்களை, அந்தந்த மாவட்டச் சிறைகளில் அடைத்தால் சிறைவாசிகளுக்கு இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதி, பாதுகாப்பு காரணங்களுக்காகத் தேனி மாவட்ட சிறையில் அடைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

31 ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய அளவிலான தப்பியோட்டம்

தமிழக வரலாற்றில், வேலூர் கோட்டையில் அமைந்திருந்த சிறப்பு முகாம் சிறையிலிருந்து LTTE அமைப்பைச் சேர்ந்த 43 சிறைவாசிகள் சுமார் 150 அடி நீளத்துக்குச் சுரங்கம் தோண்டித் தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு 31 ஆண்டுகள் கடந்த நிலையில், தேனி மாவட்ட சிறையில் ஒரே பிளாக்கில் இருந்த 17 பேர் ஒரே நேரத்தில் தப்பியோடியிருப்பது மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.