“கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த ரங்கசாமி அரசு தவறிவிட்டது”

புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்த ரங்கசாமி தலைமையிலான அரசு தவறிவிட்டதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களுடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனிய காந்தி…

புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்த ரங்கசாமி தலைமையிலான அரசு தவறிவிட்டதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களுடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனிய காந்தி ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, புதுச்சேரியில் காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியை பாஜக அதிகார துஷ்புரயோகம் செய்து ஆட்சியை கவிழ்த்ததாக தெரிவித்தார். துரோகிகளையும், எட்டப்பர்களையும் வைத்துக்கொண்டு ஐந்தாண்டு ஆட்சி செய்ததால் ஆட்சியை இழந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பண பலத்தை கொண்டு, என்.ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளதாக தெரிவித்த அவர், ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் இடையே நிலவிவரும் அதிகார சண்டையில், கொரோனா பணி தடைபட்டுள்ளதாக தெரிவித்தார். இவர்களின் இந்த அதிகார சண்டைகளை பார்த்த பின்னர் தாங்கள் தவறு செய்துவிட்டோம் என புதுச்சேரி மக்கள் தற்போது வருந்துவதாகவும் கூறினார்.

புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்த ரங்கசாமி தலைமையிலான அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டிய நாராயணசாமி, முதல்வர் ரங்கசாமிக்கு தேவை அதிகார நாற்காலி, எனவே அவர் மக்களை குறித்து கவலைபட மாட்டார் எனத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.