வரதட்சணை கொடுமையால் வாட்ஸ்அப் மூலம் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு இளம் பெண் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லம் பகுதியில் ஆயுர்வேதம் படித்து வந்தவர் விஸ்மயா(24). இவருக்கும் கோட்டயத்தைச் சேர்ந்த உதவி மோட்டார் ஆய்வாளரான கிரண்(30) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. ஆரம்பக் காலங்களில் இயல்பான வாழ்க்கையை நடத்தி வந்த விஸ்மயா நாட்கள் செல்ல செல்ல அவரின் வாழ்கையில் அனைத்தும் மாற தொடங்கிவிட்டது. கிரண் வரதட்சணை கேட்டு விஸ்மயாவை துன்புறுத்த ஆரம்பித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் விஸ்மயாவின் பெற்றோர் முன்னிலையில் கிரண் குடித்து விட்டு அவரை அடித்ததாகவும், மேலும் திருமணத்தின் போது 100 தங்கக் காசுகள் ,ஒரு ஏக்கர் நிலம் மற்றும் 10 லட்சம் மதிப்பிலான கார். இவற்றை வரதட்சணையாக கொடுத்தும் , தனக்கு கார் பிடிக்கவில்லை 10 லட்சம் காசாகத் தரவேண்டும் என்று விஸ்மயாவை துன்புறுத்தி வந்துள்ளார் கிரண். இதனை கண்ட அப்பெண்ணின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு சிறிது காலம் பெற்றோர் வீட்டிலிருந்த விஸ்மயாவை அவரது கல்லூரிக்குச் சென்று தன் பிறந்தநாளன்று கிரண் அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
அங்கு சென்ற பின் தன் தாயைத் தவிர வேறு யாரிடமும் விஸ்மயா தொடர்பில் இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் விஸ்மயா வாட்ஸ்அப் மூலம் தன் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு “கிரண் தன்னை மிகவும் துன்புறுத்துவதாகவும், தலைமுடியை இழுத்து தாக்கியதாகவும் முகத்தின் மேல் உதைத்ததாகவும் தெரிவித்திருந்த விஸ்மயா, தனது காயத்தின் புகைப்படத்தயும் பகிர்ந்திருந்தார். இந்த சம்பவம் முடிந்த இரண்டே நாட்களில் விஸ்மயா குளியலறையில் தூக்கிட்டு பிணமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் வரதட்சணை தொடர்பான புகார்களுக்கு 24 மணிநேர ஹெல்ப் லைன் எண் உருவாக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். மேலும் விஸ்மயாவின் கணவர் கிரண் காவல்துறையிடம் இருவரும் சண்டை போட்ட பிறகே விஸ்மயா உயிரை மாய்த்துக் கொண்டதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கிரண் கைது செய்யப்பட்டார்.







