அதிமுகவின் முன்னாள் எம்.பி மைத்ரேயன் 24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாஜகவில் இணைந்தார். அதோடு அக்கட்சியில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
புற்றுநோய் சிகிச்சை மருத்துவரான மைத்ரேயன், பாஜகவில் அரசியல் வாழ்வை தொடங்கிய நிலையில், 1999ம் ஆண்டு அந்த கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக அறியப்பட்ட மைத்ரேயன், பின்னர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். இந்த நிலையில் அதிருப்தி காரணமாக ஓபிஎஸ்-ஐ சந்தித்ததால், கடந்த ஆண்டு அக்டோபரில் அதிமுகவில் இருந்து மைத்ரேயனை நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த சூழலில் தான் 23 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பாஜகவில் மைத்ரேயன் இணைந்துள்ளார்.
டெல்லியில் பாஜாகவின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் மற்றும் தமிழக பொறுப்பாளர் சிடி ரவி முன்னிலையில் மைத்ரேயன் பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவை சந்தித்து மைத்ரேயன் வாழ்த்து பெற்றார்.
அமித்ஷா 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நாளை இரவு தமிழ்நாட்டுக்கு வருகை தர உள்ளார். சென்னை வரும் அமித்ஷாவை சந்திக்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இருவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வகையில் மைத்ரேயனை பாஜகவில் சேர்த்துள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு பாஜகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் அதிமுகவுக்கு தாவினர். இந்நிலையில், அதிமுக மாஜி எம்.பியை தங்கள் பக்கம் இழுத்துள்ளது பாஜக.