உலகின் நீளமான ‘பாட் டாக்சிகள்’ சேவை உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
நாட்டிலேயே முதன்முறையாக நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கும் யமுனா எக்ஸ்பிரஸ்வே பொழுதுபோக்கு மையத்திற்கும் இடையே இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. யமுனா எக்ஸ்பிரஸ்வே தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்துள்ளது. 14.6 கி.மீ தூரத்திற்கான பாதை ரூ.640 கோடி மதிப்பில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தனி நபர் விரைவு போக்குவரத்திற்கு வழிவகுக்கும் வகையில் இந்த பாட் டாக்சிகள் உள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
யமுனா எக்ஸ்பிரஸ்வே தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தின் சி.இ.ஓ அருண் வீர் சிங் இத்திட்டம் குறித்து பேசிய போது கடந்த புதன் கிழமையன்று மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக கூறினார். மேலும் சர்வதேச டெண்டர் விட்டு 2 மாதத்திற்குள் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். உலகளாவிய அளவில் 6 நிறுவனங்கள் ஆர்வமுடன் இருப்பதாகவும், இத்திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சுற்றுலாவையும் தொழில்துறையையும் மேம்படுத்துவதில் ‘பாட் டாக்சிகள்’ சேவை முக்கிய பங்கு வகிக்கும் என யமுனா எக்ஸ்பிரஸ்வே தொழில்துறை மேம்பாட்டு ஆணைய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உலகின் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, தென்கொரியா உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே உள்ள இந்த ‘பாட் டாக்சிகள்’ சேவை தற்போது நம் நாட்டின் நொய்டாவில் வரவிருப்பது உண்மையில் வரவேற்கத்தக்கது.