தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் இன்று தவெகவில் இணைந்தனர்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றார். இதைத் தொடர்ந்து திமுக, அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் ஏராளமானோர் தவெகவில் இணைந்து வருகின்றனர். அதிமுகவில் இருந்து தவெகவில் அதிக எண்ணிக்கையில் இணைந்து வருகின்றனர். சமீபத்தில் அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.வும் முன்னாள் டி.ஜி.பி.யுமான நட்ராஜ் தவெகவில் இணைந்தனர்.

இந்த நிலையில் அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர்களாகவும், முக்கிய நிர்வாகிகளாகவும் இருந்த எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்எஸ்எம் ஆனந்தன் உள்பட சுமார் 10 ஆயிரம் பேர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் முன்னிலையில் இன்று தவெகவில் இணைந்தனர். பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று நடந்த பிரமாண்ட இணைப்பு விழாவில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகள் ஒரே நேரத்தில் த.வெ.க.வில் இணைந்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.