வனத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும் என வனத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரன் உறுதியளித்துள்ளார்.
நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, வனத்துறைக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதிலளித்து பேசிய வனத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரன், ஆக்கிரமிப்பு நிலங்கள் பெரும்பாலும் விவசாய நிலங்களாகவும் குடியிருப்புகளாகவும் இருப்பதாகவும், ஆக்கிரமிப்புகளை கண்காணிக்கவும் அகற்றவும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
தேனி மாவட்டம் மேகமலையில் உள்ள வன உயிரின கோட்டத்தில் 5000 ஹெக்டர் பரப்பு நிலங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததாகவும், அந்த நிலங்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடங்கியிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மண்டல, மாநில அளவில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி வருவதாகவும் தேனி மாவட்ட ஆட்சியர் வழங்கியிருக்க செயல் திட்ட அறிக்கை பரிசீலனையில் இருப்பதாகவும் அமைச்சர் க.ராமச்சந்திரன் தெரிவித்தார். அதே போல புலம் பெயர்ந்து வந்துள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு வருவாய்த்துறை சார்பாக வேறு நிலங்கள் ஒதுக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் க.ராமச்சந்திரன் பதிலளித்தார்






