10வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்த நிலையில் இன்று இரவு 7 மணிக்கு குரூப்-1 பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் மான்செஸ்டரில் நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் மோதுகின்றன. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் நெதர்லாந்தை 95 ரன்கள் வித்தியாசத்தில் சாய்த்து அபாரமான வெற்றியை பதிவு செய்தது. இரண்டு தொடர்ச்சியான வெற்றிகளால் உற்சாகத்தில் இருக்கும் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை வலுப்படுத்தும் நோக்கில் களமிறங்குகிறது. இரு அணிகளும் சமபலத்தில் இருப்பதாலும், அரையிறுதி வாய்ப்பை பலப்படுத்தும் முக்கியமான ஆட்டமாக இருப்பதாலும், இன்றைய இந்தியா – தென்ஆப்பிரிக்கா மோதலில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது..




