தமிழ் நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.7.2026), கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், அடிடாஸ் நிறுவனத்திற்காக 850 கோடி ரூபாய் முதலீட்டில், 6,750 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில், கரூர் மாவட்டத்தில் தோல் அல்லாத காலணிகள் இரண்டாம் கட்ட உற்பத்தி ஆலை அமைப்பதற்குக் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், கோத்தாரி குழுமம் மற்றும் உலகின் முன்னணி தைவான் காலணி உற்பத்தியாளரான எவர்வான் குழுமம் ஆகியவற்றின் துணை நிறுவனமாகும். இந்நிறுவனம், கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி தொழிற்திட்டங்களை நிறுவியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற அடிடாஸ் நிறுவனத்திற்கான தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி செய்திடும் வகையில், 850 கோடி ரூபாய் முதலீட்டில், 6,750 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில், இரண்டாம் கட்ட உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது. இத்திட்டத்திற்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று அடிக்கல் நாட்டினார். இதன்மூலம், உலகளாவிய காலணி உற்பத்தித் துறையில், தமிழ்நாட்டின் நிலை மேலும் வலுப்படுவது மட்டுமின்றி, இம்மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி, ஏற்றுமதி மற்றும் பெருமளவிலான வேலைவாய்ப்புகளை, குறிப்பாக மகளிருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இத்திட்டம் அமைந்திடும்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் , செல்வி எஸ். கீர்த்தனா, மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் திருமதி சி. விஜயலட்சுமி, தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ச. விஜயகுமார், இ.ஆ.ப., வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் திரு.தீபக் ஜேக்கப், இ.ஆ.ப., கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சி.முத்துக்குமரன்,இ.ஆ.ப., பீனிக்ஸ் கோத்தாரி ஃபுட்வேர் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ரஃபிக் அகமது, எவர்வான் குழுமத் தலைவர் திரு. சாங் ரோங்-வு, எவர்வான் குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலர் திருமதி சாங் யி-சுன், வெளிநாட்டுப் பிரதிநிதி திரு. லின் ஹுவாய்-தே, அடிடாஸ் நிறுவனத்தின் மூத்த நிர்வாகக் குழு பிரதிநிதி திரு. சுதான்ஷு சர்மா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




