மலேசியாவில் இருந்து சவுதி புறப்பட்ட விமானம் – தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் தரையிறக்கம்!

மலேசியாவில் இருந்து சவுதி புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சவூதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகருக்கு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் விமான ஊழியர்கள் உள்பட 186 பேருடன் பகலில் புறப்பட்டு சென்று கொண்டு இருந்தது. இந்த விமானம் சுமார் 42 ஆயிரம் அடி உயரத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது.

அப்போது சென்னை வான் வெளியை அருகே விமானம் கடந்து சென்றதை அறிந்த விமானி இந்திய தலைமை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு இயந்திர கோளாறு காரணமாக விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டார். இதை அடுத்து விமான தலைமை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க அனுமதித்தது.

இதனை தொடர்ந்து மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதற்கிடையே பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு விமானத்திலிருந்து பயணிகள் உட்பட 186 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.