சிஜேபி நிர்வாகிகள் இருவருக்கு 5 நாள் நீதிமன்ற காவல்!

ஜந்தர் மந்தரில் போராடியதாக கைது செய்யப்பட்ட சிஜேபி நிர்வாகிகள் இரண்டு பேருக்கு 5 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகக்கோரி டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சியினர் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே டெல்லியில் பிரதானமாக போராட்டம் நடத்த பயன்படுத்தப்படும் இடமான ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கரப்பான் பூச்சி கட்சியின் செய்தி தொடர்பாளர் சௌரவ் தாஸ் மற்றும் நிர்வாகிகள் அசுதோஷ் ரங்கா , அஜின்கியா ச்ஜிண்டே ஆகியோர் தடையை மீறி ஜந்தர் மந்தரில் தேசிய கொடியுடன் நுழைந்து முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து சௌரவ், அசுதோஷ், அஜிங்கியா ஆகிய சிஜேபி நிர்வாகிகள் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் கிட்டத்தட்ட 15 மணி நேரம் தலைமறைவாக வைக்கப்பட்டு இருந்ததாக சிஜேபி நிறுவனர் அபிஜித் தெரிவித்தார்.

இந்த நிலையில் சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ஆகியோரை 5 நாள் நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே வெளியிட்டுள்ள பதிவில், “அசுதோஷ் மற்றும் சௌரவ் ஆகியோர் 5 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த தவறு என்ன? ஜந்தர் மந்தரில் மூவர்ணக் கொடியை ஏற்றியதுதான்.

கொஞ்சம் துணிச்சலைக் காட்டுங்கள், நரேந்திர மோடி. மாற்றுக்கருத்துகளை ஒடுக்குவதில் உங்களுக்கு அவ்வளவு உறுதியான எண்ணம் இருந்தால், இத்தகைய கோழைத்தனமான உத்திகளுக்குப் பின்னால் ஒளிந்துகொள்வதற்குப் பதிலாக, அதிகாரப்பூர்வமாக அவசரநிலையை அறிவிக்கும் துணிச்சலை வெளிப்படுத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.