புதிய நீதிபதிகளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

சென்னை உயா் நீதிமன்றத்தின் 2 புதிய நீதிபதிகளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

சென்னை உயா் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக இரண்டு நீதித்துறை அதிகாரிகளை நியமித்து சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் நேற்று (அக்.13) அறிக்கை வெளியிட்டிருந்தது. அதன்படி, ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, இந்தியத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பிறகு, குடியரசுத்தலைவர் இரு நீதித்துறை அதிகாரிகளான தர்மலிங்கம் லிங்கேஸ்வரன்,பாலதண்டாயுதம் கார்த்திகேயன் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமித்துள்ளார்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள இருவருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாண்புமிகு கூடுதல் நீதிபதிகளாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தர்மலிங்கம் லிங்கேஸ்வரன், பாலதண்டாயுதம் கார்த்திகேயன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

நீதியின் மாண்பையும், அரசியலமைப்பின் விழுமியங்களையும் பாதுகாக்கும் வகையில், நீதித்துறையின் மிக உயர்ந்த மரபையும், கண்ணியத்தையும் கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ள தங்களின் பணி சிறக்கட்டும்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.