அரபி கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலம் தொடங்கியுள்ள நிலையில், தடையை மீறி மீன்பிடிக்க சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன் வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 01 ஆம் தேதி முதல் ஜூன் 15ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இக்காலக் கட்டத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் என்பதால் மீன்வளத்தை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் விசை படகுகள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்படும்.
திருவள்ளூர் தொடங்கி கன்னியாகுமரி வரை மீனவர்கள் இந்த காலத்தில் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள். ஏப்ரல் முதல் ஜூன் வரை மீனவர்கள் தங்கள் விசை படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவார்கள். இன்று முதல் விசை படகுகள் கடலுக்கு செல்லாது என்பதால் மீன் வரத்து படிப்படியாக குறைவதோடு, மீன்களின் விலையும் உயரும்.
தமிழ்நாட்டில் மேற்கு கடற்கரை பகுதிகளில் இன்று தொடங்கும் இந்த மீன் பிடி தடைக்காலம் ஜூன் 15ஆம் தேதி வரை அதாவது 61 நாட்களுக்கு இருக்கும். எனவே, குளச்சல், தேங்காய்ப்பட்டிணம், கேரளா உட்பட குஜராத் வரை உள்ள அரபிக் கடல் பகுதி துறைமுகங்களில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்ப வேண்டும் என்றும், தடையை மீறி மீன் பிடிக்க சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மீன் வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா








