சென்னை, நொச்சிக்குப்பத்தில் மீன் கடைகளை அகற்றக் கூடாது என வலியுறுத்தி, அப்பகுதியில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையில் உள்ள லூப் சாலையில், அந்த பகுதி மீனவர்கள் கடை அமைத்து மீன்கள் விற்பனை செய்து வருகின்றனர். இங்கு உள்ள மீன் கடைகளில் மீன் வாங்க வருவோர் வாகனங்களை சாலைகளிலேயே நிறுத்துவதால், அந்த சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், அதனால் உடனடியாக கடைகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம், மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.
இதனை அடுத்து, சாலையோர மீன் கடைகளை, மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நொச்சிக்குப்பம் பகுதி மீனவர்கள் இன்று அப்பகுதியில் தற்காலிக டெண்ட் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையின் நடுவே படகுகளை வைத்தும், படகுகளில் கறுப்புக் கொடிகளை கட்டியும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பெண்கள் கூட்டமாக சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, லூப் சாலையில் தடுப்பை ஏற்படுத்தி மீன் கடைகள் அங்கு செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று போராட்டத்தில் கலந்துகொண்டார்.
- பி.ஜேம்ஸ் லிசா









