சேலம் அரசு மருத்துவமனையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.
சேலம் அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் சேலம் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அவசர சிகிச்சை மேல் மாடியில் உள்ள எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை உள்நோயாளிகள் பிரிவில் காலை திடீரென தீப்பற்றியது. பயங்கர புகையுடன் தீ பரவியதால் பணியில் இருந்த செவிலியர்கள், நோயாளிகள் அலறி அடித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படியுங்கள்: நடிகை த்ரிஷா குறித்த சர்ச்சைப் பேச்சு; மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு!
இதனையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்த நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு குழுவினர் உள்நோயாளிகள் அனைவரையும் அதிரடியாக வெளியேற்றி அவசர அவசரமாக வேறு வார்டுகளுக்கு கொண்டு சென்றனர். அறை முழுவதும் புகைமூட்டம் காணப்பட்டதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை முற்றிலும் கட்டுக்குள் கொண்டுவர போராடினர்.
எலும்பு மூட்டு சிகிச்சை பிரிவிலிருந்து வெளியேற்றப்பட்ட நோயாளிகள் வேறு வார்டுகளுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீ விபத்து குறித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு மருத்துவமனையில் உள்ள குளிர்சாதனத்திலிருந்து ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.







