கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் பொருட்களுக்கான இறக்குமதி வரி விலக்கு, வரும் ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
8 மாதங்களுக்குப் பிறகு ஜிஎஸ்டி கவுன்சிலின் 43வது கூட்டம் நேற்று கூடியது. காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார். இதில், தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்பட பல்வேறு மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் விளக்கம் அளித்தார். அப்போது, கொரோனா தொடர்பான பொருட்களுக்கான இறக்குமதி வரி விலக்கு, ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகக் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்தும் ஆம்போடெரிசின் B மருந்துக்கும் இறக்குமதி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், பல்வேறு பொருட்களுக்கான வரி குறைப்பு குறித்து முடிவெடுக்க விரைவாக அமைச்சரவைக் குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் அந்த குழு, வரும் ஜூன் 8ம் தேதிக்குள் எந்தெந்த பொருட்களுக்கான வரியை குறைப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பை, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தான் வெளியிட்டதாகவும் அவர் கூறினார்.