விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க வேண்டும் -ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்…

தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் நிகழ்ச்சி ஒன்றிற்கு செவ்வாய்க்கிழமை வருகைபுரிந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘ ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் எதிர்பார்ப்புக்கு மேல் அதிக மழை பெய்து உள்ளது. சீர்காழி பகுதியில் 22 சென்டிமீட்டர் மழை பெய்திருப்பதால் நிறைய இடங்களில் பயிர் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், சம்பா பயிர்கள் அதிகளவில் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனை விவசாயிகள் கவலையோடு அரசுக்கு தெரிவித்துள்ளனர். இந்த பகுதியில் வேளாண்மை இயக்குநர், விவசாய அதிகாரிகள், விவசாய நிலங்களை பார்வையிட்டு அதற்கான நஷ்டஈட்டை பெறுவதற்கான சூழலை ஏற்படுத்துவதாக கூறியுள்ளனர். அரசுக்கு பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுத்து விரைவில் வேளாண்மை இயக்குநர் அனுப்ப வேண்டும் என வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர்,‘பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு துணை நிற்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன். கடந்த அதிமுக ஆட்சியில் காப்பீடு தொகை பெரும்பாலான விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பெரும்பாலான விவசாயிகளுக்கு காப்பீடு வழங்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கஷ்டத்தில், நஷ்டத்தில் உள்ளனர் என பேசினார்.

காப்பீடு திட்டத்தின் இறுதி தேதியை காலநீட்டிப்பு செய்வது ஒருபுறம் இருந்தாலும் கூட காப்பீடு திட்டத்தில் விவசாயிகளுக்கு முழுமையாக கொடுக்கக்கூடிய சூழலை அரசு ஏற்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு யூரியா தட்டுப்பாடு இருக்கக் கூடாது.

விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் யூரியா வழங்க அதிகாரியுடன் பேசி மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.எந்தெந்த பருவத்தில் தூர்வார வேண்டுமோ அந்தந்த பருவத்தில் தூர்வார வேண்டும். திமுக ஆட்சியில் வாய்க்கால்கள் சரிவர தூர்வாரவில்லை எனவும் அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.