கேரளாவில் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கி விட்டு அந்த இடத்தில் கல்வி நிபுணர்களை நியமிப்பதற்கு பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும், முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாக இருவரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இதனிடையே, கேரளாவில் உள்ள அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேஸ்வரி நியமனம் சட்டவிரோதமானது என கூறி துணைவேந்தர் நியமனத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
மேலும் மாநில அரசு சார்பில் 3 பேர் பெயர்களுக்கு பதிலாக ஒருவர் பெயர் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆளுநர், இதர 11 பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். மேலும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அவர் கூறினார்.
இதற்கு மாநில அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கும் ஆளுநரை அப்பதவியில் இருந்து நீக்க அவசர சட்டம் கொண்டு வர முதலமைச்சர் பினராயி விஜயன் அரசு களமிறங்கியது. அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சட்டமசோத நிறைவேற்றப்பட்டது.
அமைச்சரவை கொண்டு வந்த சட்டத்தில், கல்வி நிபுணர்களை பல்வேறு பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக நியமிக்க விரும்புகிறது. மாநிலத்தில் உள்ள 14 பல்கலைக்கழகங்களுக்கும் தனித்தனி வேந்தரை அரசே நியமிக்குமா என்பது இன்னும் தீர்மானிக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய-மாநில உறவுகளை ஆய்வு செய்வதற்காக 2007ல் அமைக்கப்பட்ட எம்.எம்.புஞ்சி கமிஷன், அதிபரின் அதிகாரங்களை ஆளுநர்களுக்கு வழங்குவதற்கு எதிராக உறுதியளித்ததாக அமைச்சரவை மேற்கோள் காட்டியது.
மாநில அரசுகள் தங்கள் அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்றுவதில் இருந்து கூடுதல் அதிகாரம் அவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பல்கலைக்கழகங்களின் வேந்தரின் பங்கை ஆளுநர்கள் மீது சுமத்துவதை மாநில அரசுகள் தவிர்க்க வேண்டும் என்று புஞ்சி கமிஷன் வலியுறுத்தியது என்று அமைச்சரவை குறிப்பிட்டது.








