பாகிஸ்தானில் பாலின சமத்துவத்தை முன்னிறுத்தி தந்தை ஒருவர் கருத்து தெரிவித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
உலகம் முழுவதும் கடந்த 8 ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பாலின சமத்துவம் குறித்து பரவலாக பேசப்பட்டது. நியூஸ்7 தமிழும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி ’நிகரென கொள் 2023’ மற்றும் மாதவிடாய் விடுமுறைக்கான கையெழுத்து இயக்கத்தையும் மார்ச் மாதம் முழுவதும் முன்னெடுத்துள்ளது.
பழைய நம்பிக்கைகள் கொண்ட சிலர் பாலின சமத்துவத்தை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், நவீன யுகத்தில் ஆண்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பாகிஸ்தானில் தந்தை ஒருவர் கூறிய கருத்து பலரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இதையும் படியுங்கள் : மந்தனா தலைமையில் மந்தமா? – மகளிர் ஆர்சிபிக்கும் தோல்விகள் தொடரும் சோகம்
பாகிஸ்தானில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும், பாலின சமத்துவம் மற்றும் மகளிருக்கான உரிமைகளை வலியுறுத்தி ’அவுரத் மார்ச்’ எனப்படும் சமூக-அரசியல் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற ’அவுரத் மார்ச்’-இல் தனது மகளுடன் கலந்து கொண்ட தந்தை ஒருவர் கலந்துகொண்டார். அப்போது அவர்களிடம், ’ஆண்கள் கலந்துகொள்ள என்ன உரிமை இருக்கிறது’ என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார்.
இவ்வாறு கேட்ட செய்தியாளரை கடுமையாக சாடிய அந்த தந்தை, “பாகிஸ்தானின் பெரும்பாலான சட்டங்கள் பெண்களுக்கு எதிரானவை. நீங்கள் நீதிமன்றத்திற்கோ, அல்லது வேறு எங்கு சென்றாலும், அங்கு பெண்களின் குரல் குறைவாகவே ஒலிக்கிறது. உங்களுக்கு இது தெரியாது என்றால், காவல்நிலையத்திற்கோ, நீதிமன்றத்திற்கோ ஒரு பெண்ணை தனியாக அனுப்பிப் பாருங்கள்” என்று தெரிவித்தார்.
https://twitter.com/Leena_Ghani/status/1633889723759378452
இது தொடர்பான வீடியோவை லீனா கானி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இணையவாசிகள் பலரும் முற்போக்கு பார்வை கொண்ட அந்த தந்தையை பாராட்டி வருகின்றனர்.







