கல்லிடைக்குறிச்சி அருகே வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற தந்தை, மகன் மின்சாரம் தாக்கி பலியான விவகாரத்தில், இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருவதாக அம்பாசமுத்திரம் துணை காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் நியூஸ் 7 தமிழுக்கு தகவல் அளித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் அம்பையை அடுத்த அயன் சிங்கம்பட்டியை சேர்ந்தவர் துரைச்சாமி மகன் பேச்சிமுத்து(55). இவரது மகன் வனராஜ் (28). விவசாயிகளான இவர்கள் இருவரும் மணிமுத்தாறு 40 அடி கால்வாய் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு நேற்று நள்ளிரவு தண்ணீர் பாய்க்கச் சென்றனர். அப்போது மணிமுத்தாறு மீன்வளத்துறை அருகே உள்ள 40 அடி கால்வாயை கடக்க முயன்ற போது இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகி தண்ணீரில் சடலமாக மிதந்தனர்.
இதனைப் பார்த்த விவசாயிகள் போலீசார் மற்றும் மின்சார துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்தனர். தொடர்ந்து மணிமுத்தாறு போலீசார் தந்தை, மகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக கால்வாய் தண்ணீரில் மர்ம நபர்கள் மின்சாரத்தை செலுத்தியுள்ளது தெரியவந்தது. இதனை அறியாத விவசாயிகளான தந்தை மகன் இருவரும் அதில் பலியாகி இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து தண்ணீரில் மின்சாரத்தை செலுத்திய இருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தொடர்ந்து இந்த சம்பவத்தில் சமந்தப்பட்ட மேலும் ஒருவரை போலிசார் தேடி வருகின்றனர். வயலுக்கு தண்ணீர் பாய்க்கச் சென்ற விவசாயிகளான தந்தை மகன் மின்சாரம் தாக்கி இறந்தது கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் 304/2, மற்றும் முறைகேடாக மின்சாரத்தை திருடியது என இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மாஞ்சோலை காவல்துறை தொடர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அம்பாசமுத்திரம் துணை காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் நியூஸ் 7 தமிழுக்கு தகவல் அளித்துள்ளார்.







