அமெரிக்கா – ஈரான் போரால் சர்வதேச அளவில் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் 20 சதவீத வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியிலும் மேற்காசிய போரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களும் கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்து வருகின்றன. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் மாதம் 30 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
அந்த வகையில், இந்தியாவில் கடந்த மே 15ம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, இன்று மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் 87 பைசா அதிகரித்து ரூ.104.49-க்கு விற்பனையாகிறது. டீசல் விலை லிட்டருக்கு 91 காசுகள் அதிகரித்து ரூ.96.11 ஆக விற்பனையாகிறது. கடந்த 4 நாட்களில் லிட்டருக்கு ரூ.4 வரை பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது.







