மருமகளை கொன்ற மாமனார்; திருப்பத்தூரில் கொடூரம்

வீட்டிற்கு வந்த மருமகளை, மாமனாரே கட்டையால் அடித்து, கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆத்தூர் குப்பம் பெரிய ஜங்களாபுரம் பகுதியில் வசிப்பவர் மணி. 60 வயதான இவர்,…

வீட்டிற்கு வந்த மருமகளை, மாமனாரே கட்டையால் அடித்து, கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆத்தூர் குப்பம் பெரிய ஜங்களாபுரம் பகுதியில் வசிப்பவர் மணி. 60 வயதான இவர், அதே பகுதியில் விவசாயம் பார்த்து வந்துள்ளார். இவருடைய மகன் சிவனுக்கும், கந்திலி பகுதியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்த முருகம்மாள் என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தற்போது சிவன், ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் சிவன், முருகம்மாள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி வாக்குவாதம் நடந்து வந்துள்ளது. இதனால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முருகம்மாளிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சிவன். இந்த விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் முருகம்மாள், தனது கணவர் சிவனின் வீட்டை விட்டு வெளியேறி கந்திலி பகுதியில் தனது இரண்டு குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த 15 நாட்களுக்கு முன், சிவன் தனது சொந்த ஊருக்கு வந்து சென்றார்.  இதையறிந்த முருகம்மாள், விவாகரத்து வழக்கு நடந்துகொண்டிருப்பதால் சிவன் வேறு ஒரு திருமணத்திற்குத் தயாராகிவிட்டாரோ என்று அஞ்சியுள்ளார்.

இதனால் மூன்று நாட்களுக்கு முன், தனது இரண்டு குழந்தைகளுடன் தனது கணவர் சிவனின் வீட்டிற்குச் சென்ற முருகம்மாளை, அவரது தந்தை மணி, வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. இதனால், நீண்ட நேரம் இருவருக்கும் வாக்கு வாதம் நிகழ்ந்துள்ளது. பல மணி நேர வாக்குவாதத்திற்குப் பிறகு முருகம்மாள் வீட்டிற்குள் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், காலை சமையலறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த முருகம்மாளை, பின்பக்கமாக, நின்று மாமனார் மணி கட்டையால் அடித்துள்ளார் . இதில் நிலை தடுமாறி அதே இடத்தில் மயங்கி விழுந்த முருகம்மாளைப் பார்த்த அவரின் குழந்தைகள், சத்தம் போட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த மணி, இரண்டு குழந்தைகளையும் தனி அறையில் அடைத்து விட்டு, மயங்கி இருந்த முருகம்மாளின் கழுத்தை அங்கிருந்த கத்தியால் கொடூரமாக அறுத்து கொலை செய்தார். மேலும் அவர் இறந்துவிட்டாரா என்று உறுதி செய்த பின் கொலை செய்யப் பயன்படுத்திய கத்தியை அருகில் இருந்த கிணற்றில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பித்ததாகக் கூறப்படுகிறது.

பின்பு குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு, வீட்டிற்கு வந்த அக்கம் பக்கத்தினர், முருகம்மாள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.  தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர், அவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்கு அனுப்பிவைத்தனர். பின்பு முருகம்மாளின் தந்தை முருகேசன் அளித்த புகாரின் அடிப்படையில், விசாரணையை தொடங்கிய காவல்துறையினர், மணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.