முக்கியச் செய்திகள் இந்தியா

தேசிய கீதம் இசைக்கும் போது எழுந்து நிற்காவிட்டால் குற்ற‍ம் அல்ல‍: ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றம்

 தேசிய கீதம் இசைக்கும்போது எழுந்து நிற்காவிட்டால் குற்ற‍ம் அல்ல‍ என்று ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள‍து.

ஜம்மு&காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்ட‍த்தில் உள்ள‍ பாணி பகுதியில் உள்ள‍ அரசு கல்லூரியில் முனைவர் தவ்ஷீப் அகமது பட் ஒப்பந்த அடிப்ப‍டையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் சர்ஜிக்க‍ல் ஸ்டிரைக் நடவடிக்கையை பாராட்டும் வகையில் இந்த கல்லூயில் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பரில் விழா நடைபெற்ற‍து. அப்போது தேசிய கீதம் இசைக்க‍ப்ப‍ட்ட‍போது பேராசிரியர் தவ்ஷீப் அகமது பட் எழுந்து நிற்கவில்லை என்று கூறப்ப‍டுகிறது.

இது குறித்து அந்த கல்லூரியின் மாணவர்கள் அளித்த‍ புகாரின் பேரில் பேராசிரியர் தவ்ஷீப் அகமது பட் மீது வழக்குப்பதிவு செய்ய‍ப்ப‍ட்ட‍து. தேசிய கவுரவத்தை அவமதிப்பு செய்வதை தடை செய்யும் சட்ட‍ம் பிரிவு 3ன் படி அவர் மீது வழக்குப் பதிவு செய்ய‍ப்ப‍ட்ட‍து.  இதையடுத்து அவரது பேராசிரியர் பதவியும் பறிக்கப்ப‍ட்ட‍து.

எனவே இதனை எதிர்த்து தவ்ஷீப் அகமது பட் தொடர்ந்த வழக்கில், மாவட்ட‍ நிர்வாக மாஜிஸ்திரேட் உத்த‍ரவின் படி போலீசார் தம் மீது வழக்குப்பதிவு செய்ய‍ முடியாது என்று கூறியிருந்தார். நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிபதிக்கு மட்டுமே போலீசுக்கு உத்த‍ரவிடும் அதிகாரம் உள்ள‍து என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் தேசிய கவுரவத்தை அவமதிப்பு செய்வதை தடை செய்யும் சட்ட‍ம் பிரிவு 3ன் படி தான் குற்ற‍ம் செய்ய‍வில்லை என்றும் மனுவில் கூறியிருந்தார்.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட‍ ஜம்மு&காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் குமார், ஒரு குற்ற‍ச்சாட்டின் கீழ் போலீசாரை எப்ஐஆர் பதிவு செய்யும்படி நிர்வாக மாஜிஸ்திரேட் உத்த‍ரவிட முடியாது என்று கூறினார். ஒரு புகார் நிர்வாக மாஜிஸ்திரேட்டுக்கு வரும்பட்சத்தில் அதனை போலீசாருக்கு அனுப்ப‍ வேண்டும் என்றும் அதில் உத்த‍ரவு ஏதும் பிறப்பிக்க‍ முடியாது என்றும் தெரிவித்தார்.

தேசிய கீதம் இசைக்க‍ப்ப‍ட்ட‍போது மனுதாரர் நிற்கவில்லை என்று கூறப்பட்டுள்ள‍து. தேசிய கீதம் இசைக்க‍ப்ப‍ட்ட‍ தருணத்தில் எந்தவித நோக்க‍மும் இன்றி குறிப்பிட்ட‍ இடத்தில் நிற்காமல், வளாகத்துக்குள் வேறு இடத்துக்கு  மனுதாரர் சென்றிருக்கும்பட்சத்தில் என்னைப் பொறுத்த‍வரை, அந்த செயலானது தேசிய கீதம் பாடுவதை தவிர்க்க‍வோ அல்ல‍து இடையூறு ஏற்படுத்துவதோ ஆகாது என்றும் நீதிபதி கூறினார். இதையடுத்து பேராசிரியருக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையை நீதிபதி தள்ளுபடி செய்து உத்த‍ரவிட்டார்.

Advertisement:
SHARE

Related posts

3ஆம் கட்ட தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

Ezhilarasan

111 நாடுகளில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல்

Gayathri Venkatesan

இந்தியாவில் 1.40 லட்சத்தை கடந்த கொரோனா உயிரிழப்பு!

Arun