தமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம்?

ஒரு படம் வெற்றி பெற்றால், அந்த படத்தை தழுவி அதன் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் வெளிவருவது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. டிரெண்டை பொறுத்து நகைச்சுவை படங்கள், பேய் படங்கள்,…

ஒரு படம் வெற்றி பெற்றால், அந்த படத்தை தழுவி அதன் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் வெளிவருவது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. டிரெண்டை பொறுத்து நகைச்சுவை படங்கள், பேய் படங்கள், ஆக்‌ஷன் திரைப்படங்கள் என ஒரே மாதிரியான ஜானரில் படங்கள் வெளியாகின்றன.

அந்த வகையில், பழைய படங்களின் தலைப்புகளை அப்படியே பயன்படுத்தும் டிரெண்ட் தமிழ் சினிமாவில் அதிகரித்துள்ளது. முன்னணி நடிகரான தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர் நடிக்கும் 43வது படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டது. மாறன் என பெயரிடப்பட்ட இப்படத்தின் புகைப்படத்தை தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் செய்தனர்.

ஆனால், சத்யராஜ் நடிப்பில் ஜவகர் இயக்கத்தில் கடந்த 2002ம் ஆண்டே மாறன் என்ற பெயரில் திரைப்படம் வெளியானதை பலர் நினைவு கூர்ந்து வருகின்றனர். மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். விஜய்சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

இதேபெயரில் 1986 இல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய பெற்றது. நடிகர் விஜய் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. விஜய் பிறந்த நாளை முன்னிட்டு ஜீன் 22 ஆம் தேதி பீஸ்ட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டன.இதற்கு முன்பே கடந்த 2018ல் பீஸ்ட் என்ற ஆங்கில திரைப்படம் வெளியாகி உள்ளது. அந்த படத்தை மைக்கேல் பியர்ஸ் இயக்கி இருந்தார்.

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயந்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ள நிலையில், இதே தலைப்பில் 1981ல் ரஜினிகாந்த நடிப்பில் எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் வெளியான நெற்றிக்கண் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதே நேரத்தில் 1963 இல் சி.வி ஸ்ரீதர் இயக்கத்தில் இதேபெயரில் ஏற்கனவே நெஞ்சம் மறப்பதில்லை என்ற படம் வெளியாகியிருப்பதும் நினைவு கூறப்படுகிறது.

2020ல் உதயநிதி – மிஷ்கின் கூட்டணியில் வெளியான சைக்கோ திரைப்படம் உதயநிதி சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.ஆல்பிரட் ஹிட்ச்காக் இயக்கத்தில் 1960ல் சைக்கோ என்ற படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. சைக்கோ திரைப்படங்களுக்கு இந்த திரைப்படம் தான் முன்னுதாரணமாக கூறப்படுகிறது.

இப்படி பழைய படங்களின் பெயர்களையே புதிய படங்களுக்கு வைப்பது அதிகரித்து வருவதால், தமிழ் சினிமாவில் தலைப்புகளுக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளதா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.